கோவை: குனியமுத்தூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குறள் மலை சங்கம் சார்பில் உலக திருக்குறள் மாநாடு இன்று (ஜனவரி 7) தொடங்கியது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி குத்துவிளக்கு ஏற்றி உலக திருக்குறள் மாநாட்டைத் தொடங்கிவைத்தார்.
'தமிழ்நாடு புண்ணிய பூமி' - ஆளுநர் புகழாரம்
மாநாட்டில் பேசிய ஆர்.என். ரவி, "தமிழ்நாடு புண்ணிய பூமி, ஆன்மிக பூமி. இங்கு திருவள்ளுவர், விவேகானந்தர், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ. சிதம்பரம் பிள்ளை, மகாகவி பாரதியார் போன்ற சிறந்த மனிதர்கள் இருந்துள்ளார்கள். பலர் ஆன்மிகம் மூலம் இளைஞர்களுக்குப் பல அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு' என்ற திருவள்ளுவரின் முதல் குறளில் வரும் ஆதி பகவனும், ரிக் வேதத்தில் வரும் பரமாத்மாவும் ஒன்றுதான். திருக்குறள் ஆன்மிக கருத்துகளைப் பேசி இருக்கின்றது.
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையிலான விடயங்களையும், ஒழுக்கத்தையும், நெறிமுறைகளையும் திருக்குறள் போதிக்கின்றது. ஆராய்ச்சியாளர்கள் மொழிமாற்றம் செய்யும்போது, அதன் உள்ளார்ந்த பொருள் மாறுவதைத் தவிர்க்க வேண்டும். ஆன்மிகம், பக்தி கொள்ளத் தனியாகக் காரணம் தேவையில்லை. நாம் எப்போதும் அறநெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்" என்றார்.
குறட்பாக்கள் பதித்த திருக்குறள் மலையொன்றை உருவாக்குவோம்
இம்மாநாட்டில், "1330 குறள்களை மலையின் மீது கல்வெட்டாகப் பதித்து திருக்குறள் மலை உருவாக்கப்பட வேண்டும்; மலையில் கல்வெட்டில் பதிக்கப்படும் திருக்குறளை, உலக நூலாக யுனெஸ்கோ நிறுவனம் அங்கீகரிக்க வேண்டும்.
உலக நூலாக அறிவிக்கப்பட இருக்கும் திருக்குறளை, ஐக்கிய நாடுகள் சபை தன் உறுப்பு நாடுகள் அனைத்திலும் பாடத்திட்டமாகச் சேர்க்க ஆவன செய்ய வேண்டும்" என மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க: மதுரையில் ஜல்லிக்கட்டு நடக்குமா? - குழப்பத்தில் மாவட்ட நிர்வாகம்