முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து சென்னையில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக சத்தியமூர்த்தி பவனில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு காங்கிரஸின் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா, எம்.பி ஜெயக்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரிஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசையும், மோடியையும் எதிர்த்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி ஜெயக்குமார் கூறுகையில், "மத்திய அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் ப.சிதம்பரத்தை கைது செய்துள்ளனர். சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது அமித்ஷா கொலை குற்றத்திற்காக கைது செய்யபட்டார். அதனால், இப்போது உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா, ப.சிதம்பரத்தை கைதுசெய்துள்ளார்.
பொருளாதாரச் சீர்கேட்டை சிதம்பரம் சுட்டிக்காட்டினார், மேலும் அவர் பாஜக அரசுக்கு மிகவும் நெருடராக இருந்து கொண்டிருந்தார். அதனால் தான் கைது செய்துள்ளனர். இன்று நாட்டின் பொருளாதாரம் இறங்கியுள்ளது. மக்களை திசை திருப்பவே இந்த கைது நடவடிக்கை நடந்தேறியது" என்று தெரிவித்தார்.
மேலும் விரைவில் அவர் விடுதலை செய்யப்படவில்லை என்றால், எங்களது போராட்டமானது மேலும் தொடரும் என ஜெயக்குமார் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.