முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி விடுதலைப் புலிகளால் படுகொலைசெய்யப்பட்டார். இளம் வயதிலேயே பிரதமரான ராஜிவ், அஸ்ஸாம்-பஞ்சாப் அமைதி ஒப்பந்தத்தில் 1985ஆம் ஆண்டும், மிசோரம் அமைதி ஒப்பந்தத்தில் 1986ஆம் ஆண்டும் கையெழுத்திட்டார்.
சுயசார்பு கொள்கை, அரபு நாடுகளுடன் நெருக்கம் போன்றவற்றால் அமெரிக்காவின் பகையை ராஜிவ் பெற்ற நிலையில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு, இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன் ராஜிவ் நல்லுறவில் ஈடுபட்டு தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு என்ற சார்க் அமைப்பைத் தோற்றுவித்தார்.
இந்நிலையில், ராஜிவ் காந்தியின் 29ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரின் நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட கே.எஸ். அழகிரி அங்கு அமைக்கப்பட்டிருந்த ராஜிவ் காந்தி புகைப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், பயங்கரவாதத்தை ஒழிப்போம், இந்தியாவில் அமைதி காப்போம் என்ற உறுதிமொழியை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் கிருஷ்ணசாமி, தங்கபாலு, குமரி அனந்தன் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ’பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும்’ - வெங்கையா நாயுடு