சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, சீன தூதரக அலுவலர் மற்றும் டெல்லியில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் தூதரக அலுவலர்கள் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.
அப்போது வெளிநாட்டில் இருந்து தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பது தொடர்பாக தூதரக அலுவலர்களிடம் முதலமைச்சர் ஆலோசனை செய்தார்.
பின்னர் தூதரக அலுவலர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய அளவில் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு இரண்டாவது மாநிலமாக உள்ளது. மேலும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகிறது.
தமிழ்நாட்டின் சிறப்பை மற்ற நாடுகளில் வெளிப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும். மேலும் வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு ஈர்க்கும் வகையில் செயல்பட வேண்டும். வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டுமென முதலமைச்சர் பழனிசாமி தங்களிடம் கோரிக்கை விடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.