சென்னை: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பேசப்பட்டன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை மனு ஒன்றையும் பிரதமர் நரேந்திர மோடியிடம் அளித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் பிரதமரை அவரது இல்லத்தில் 25 நிமிடங்கள் சந்தித்து பேசினார். பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் அவர் பேட்டியளித்தபோது, “தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு முதன்முறையாக டெல்லி வந்துள்ளேன். கரோனா பெருந்தொற்றால் உடனே வந்து சந்திக்க முடியவில்லை, இந்தச் சந்திப்பு மகிழ்ச்சிகரமாக இருந்தது.
முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். மேலும், வளர்ச்சி திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன் எனத் தெரிவித்தார். கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது. அதில், “கூடுதலான தடுப்பூசி வழங்க வேண்டும், நிதி ஆதாரம் முழுமையாக வழங்க வேண்டும், நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும், மேகதாது அணை அனுமதி ரத்து செய்ய வேண்டும், கோதாவாரி- காவேரி, காவிரி- குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், மதுரை எய்ம்ஸ் விரைந்து நிறைவேற்ற வேண்டும், புதிய கல்விக் கொள்கை ரத்து செய்ய வேண்டும், உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும், வேளாண் சட்டம் திரும்ப பெற வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையை நிறைவேற தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு கைகொடுப்போம் என்ற வகையில் இருப்போம். 7 பேர் விடுதலை தொடர்பாக நினைவூட்டல் கடிதம் குடியரசு தலைவருக்கு அனுப்பி உள்ளோம். போதுமான அளவுக்கு தடுப்பூசி வழங்க கோரிக்கை வைத்து உள்ளோம்.
திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்படும். தடுப்பூசி அறிவிப்பதில் ஒன்றிய அரசு வெளிப்படைதன்மையோடு இருக்க வேண்டும். விரைவில், படிப்படியாக டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: பிரதமர் நரேந்திர மோடியுடன் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!