இது குறித்து இயக்குநர் பாரதிராஜா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "படிப்படியாக மக்களின் அன்றாட வாழ்வை மீட்டுக் கொண்டிருக்கும் அரசுக்கு பாராட்டுக்கள்.
விதிகள் தளர்த்தி சின்னத்திரை படப்பிடிப்பிற்கு 60 பேர் கொண்ட குழு கலந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அதே நேரம், சினிமாவும் முடங்கிப்போய் கிடக்கிறது. திரையரங்குகள், விநியோகஸ்தர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் அடுத்த நிலை என்ன என்று திணறி வருகிறோம்.
பலர் உணவுக்கே வழியின்றி சிரமப்படுகிறார்கள். முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் வட்டி கட்ட முடியாமல் திகைக்கின்றனர். பணம் கொடுத்தவர்களும் போட்ட பணத்திற்கான வரவு வழி தெரியாமல் நஷ்டப்பட்டுள்ளனர். சினிமாவை நசிந்துவிடாமல் காக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
எனவே முதலமைச்சர், தயவு கூர்ந்து சின்னத்திரை படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கியுள்ளது போல் சினிமா படப்பிடிப்பைத் தொடங்கவும் அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அரசு வரையறுக்கும் கட்டுப்பாடு, பாதுகாப்பு முறைகளுடன் இயங்குவோம் என உறுதியளிக்கிறோம். இதன்மூலம் சிறுபடங்கள் படப்பிடிப்பிற்குச் செல்ல ஏதுவாக அமையும் என்றார்.