சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் வருகிற மே 2ஆம் தேதி 75 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வருபவர்களின் உடல் வெப்பநிலை 98.6-க்கு மேல் இருந்தால் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள்.
வாக்கு எண்ணும் அறைக்கு செல்லும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை கண்டிப்பாக எடுக்க வேண்டும். இரண்டு தடவை கரோனா தடுப்பூசி செலுத்தியவர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.
மையங்களில், தேர்தல் நடத்தும் அலுவலரின் முடிவே இறுதியானது. எந்த ஒரு ஆலோசனையும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கப்படாது.
மே1 மற்றும் மே 2 தேதிகளில் பொது முடக்கம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.
வருகின்ற மே இரண்டாம் தேதி, தேர்தல் வழிமுறைகள், கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி வாக்கு எண்ணிக்கை நடக்கும்.
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 66,007 வாக்குச் சாவடிகளில் ஓட்டு பதிவின் போது 3,33,251 அரசு ஊழியர்கள் பணியாற்றினர், வாக்கு எண்ணிக்கையின் போது 13,592 அரசு ஊழியர்கள் பணியாற்றினர்.
2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 88,937 வாக்குச் சாவடிகளும், ஓட்டு பதிவின் போது 4,39,016 அரசு ஊழியர்கள் பணியாற்றினர். வருகின்ற மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது 16,386 அரசு ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர் என்று தெரிவித்தார்.
RTPCR - சோதனை சான்றிதழ், தடுப்பூசி போட்டதற்கான சான்று வைத்திருந்தாலும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதி வழங்கப்படும். வெப்ப பரிசோதனை செய்யப்படும் போது 98.6 டிகிரி மேல் இருந்தால் அனுமதி இல்லை.
ஒவ்வொரு தொகுதியை பொறுத்து அங்கே இருக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர் வாக்கு எண்ணிகைக்கான மேஜைகள் மாற்றம் இருக்க வாய்ப்பு உள்ளது, அவர்கள் முடிவுதான் இறுதியானது எனக் கூறினார்.