சென்னை: பட்டினப்பாக்கம் பகுதியில் பூம்பொழில் வளாகத்தில் உள்ள மின்சாரம் மற்றும் மதுவிலக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டின் முன்பு நேற்று (ஜன.3) தமிழ்நாடு டாஸ்மாக் மற்றும் கட்டட உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பரசன், ராமநாதன், திருநாவுக்கரசு ஆகியோர் தலைமையில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் எவ்வித முன் அனுமதியும் பெறாமல் வீட்டினை முற்றுகையிட வேண்டும் என்று வளாகத்தின் உள்ளே நுழைய முற்பட்டனர்.
அப்போது பட்டினப்பாக்கம் காவல் துறையினர், இந்தப் பகுதி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, நீதிபதிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள் வசிக்கும் பகுதி என்றும், இங்கு எவ்வித அனுமதியும் பெறாமல் நுழையக் கூடாது என்றும் எச்சரித்தனர்.
பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு
மேலும், கரோனா, ஒமைக்ரான் தொற்று பரவுவதை தடுக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி கூட்டம் கூடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது என்றும் மீறி செயல்படுவது சட்டப்படி குற்றம் என்றும் கூறினர்.
காவல் துறையினரின் எச்சரிக்கையையும் மீறி முற்றுகையிட்டதால், தமிழ்நாடு டாஸ்மாக் மற்றும் கட்டட உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பரசன் உள்பட முற்றுகையில் ஈடுபட்ட 46 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களின் மீது காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் பணியில் பட்டினப்பாக்கம் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு சிறார் நீதி சட்ட விதிகளைத் திருத்தாவிட்டால்... எச்சரித்த நீதிமன்றம்!