சென்னை: தமிழ்நாடு அரசு இன்று தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில், பனை மரங்களை காக்கவும், கூடுதலாக பனை மரங்களை வளர்க்கவும், அதன் மதிப்புக்கூட்டு பொருள்களை தரம் குறையாமல் வணிகம் செய்யவும் ‘பனை மேம்பாட்டு இயக்கம்’ தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
பனை நம் மாநில மரம். வரலாற்றின் தொடர்ச்சியான எழுத்துப் பதிவு கொண்ட மரம். அழகர் மலையில் உள்ள கல்வெட்டில் ‘பாணித வாணிகன் நெடுமலன்’ என்ற குறிப்பு இருக்கிறது. ‘பாணிதம்’ என்பது பனையின் பதநீரைக் காய்ச்சி உருவாக்கும் இனிப்பான பாகைக் குறிக்கும் சொல்லாகும்.
பனை மரம் அனைத்து பாகங்களையும் மானுடத்திற்குக் கொடையாய் அளிக்கும் அற்புதத் தரு. அதன் குருத்தோலை தோரணம் கட்டவும், அழகியல் பொருள்கள் செய்யவும் பயன்படுகிறது. சாரை ஓலை கூடை, பாய் செய்ய உதவுகிறது. பச்சை மட்டை வேலி அமைக்கவும், நார் எடுக்கவும் உதவுகிறது. பனம் நுங்கும், பனம் பழமும் தருகிறது. பனங்கொட்டை கிழங்காக மாறி உண்ணப் பயன்படுகிறது. பாளை பதநீர் பெற உபயோகமாகிறது.
பலன் தரும் பனை
ஓலை கூரை வேயவும், பதநீர், கஞ்சி போன்றவற்றை ஊற்றிக் குடிக்கவும் பயன்படுகிறது. உச்சிப்பகுதி மரத்தொட்டி செய்ய உதவுகிறது. பத்தை மட்டை தும்பு எடுக்கவும், தரை தேய்க்கும் பிரஷ் செய்யவும் பயன்படுகிறது. நடு மரம் உத்தரம் செய்ய உதவுகிறது. தூர்ப்பகுதி வட்ட வடிவிலான பத்தலாக பயன்படுகிறது. வேர் மழைக்காலங்களில் நிகழும் மண்ணரிப்பைத் தடுக்க பயனுள்ளதாக இருக்கும்.
பனை மரத்தில் கூந்தல் பனை எனும் ஒரு வகைப் பனை உள்ளது. அதை தாளிப்பனை என்றும் அழைப்பார்கள். விசிறிப்பனை என்கிற பெயரும் அதற்குண்டு. இவை தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் பயிரிடப்பட்ட பனையாகும். கடற்கரைப் பகுதிகளில் இந்த பனை அதிகம் வளரும். அதன் ஓலைகள் மிருதுவாகவும், வெளிறியும் காணப்படும்.
அப்பனை ஓலையை எழுதப் பயன்படுத்தினார்கள். தமிழர்கள் பனை ஓலையைப் பயன்படுத்தியதை அல்புரூனி தன்னுடைய பயணக்குறிப்பில் குறிப்பிடுகிறார். அரசு நிர்வாகத்தில் ஓலைநாயகம் என்பவர் இருந்திருக்கின்றார். பனை ஓலையின் மற்றொரு பெயராக ‘மடல்’ என்ற சொல்லும் உண்டு.
இலக்கு நிர்ணயம்
தமிழ்நாட்டில் பனைமரத்தின் பரப்பு வெகுவாகக் குறைந்து வருவதைக் கருத்திற்கொண்டு, தமிழ்நாடு அரசு தற்போதுள்ள பனைமரங்களைப் பாதுகாப்பதுடன், கூடுதலாக பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, நடப்பாண்டில் 30 மாவட்டங்களில், 76 லட்சம் பனை விதைகளையும், ஒரு லட்சம் பனங்கன்றுகளையும் முழு மானியத்தில் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளும்.
ஏரிக் கரைகளிலும், சாலையோரங்களிலும் பனைமரங்களை வளர்ப்பதற்கு மீண்டும் முயற்சிகள் எடுக்கப்படும். இன்று மக்கள் அதிகம் விரும்பும் பொருட்களாக பனங்கற்கண்டு, பதநீர், கருப்பட்டி போன்றவை விளங்குகின்றன. அவற்றைக் கலப்படமில்லாமல் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தால் மிகுந்த வரவேற்பைப் பெறும். இத்துறை பனைமரங்களைப் போற்றிக் காக்கும் உன்னதப் பணியை உன்னிப்பாக மேற்கொள்ளும்.
பனை மதிப்புக்கூட்டு பொருள்கள் குறித்து ஆய்வு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பனைமரம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
பனை வெல்லம் உற்பத்தி தொடர்பான நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, தரமான பனை வெல்லம் தயாரிப்பதற்கு விவசாயிகளுக்கு உரிய பயிற்சியும், பனங்கருப்பட்டி காய்ச்சும் நவீன இயந்திரம் கொள்முதல் செய்திட மானியமும் வழங்கப்படும்.
மேலும், பனை மரத்திலிருந்து எடுக்கப்படும் மதிப்புக்கூட்டுப்பொருளான பனை வெல்லத்தினை பனை வாரியம், வேளாண் கூட்டுறவு சங்கங்களுடன் ஒருங்கிணைந்து நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பனை மரம் வெட்ட தடை
தமிழர்களின் வாழ்வோடும், மொழியோடும், வளத்தோடும், ஒன்றுபட்டு, மழை ஈர்ப்பு மையம், நீர் நிலைகளின் காவலன் என்றும் அழைக்கப்படும் பனை மரத்தினை, வேரோடு வெட்டி விற்கவும், செங்கல் சூளைகளுக்குப் பயன்படுத்தும் செயலினைத் தடுக்க இவ்வரசால் உத்தரவு பிறப்பிக்கப்படும்.
தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பனைமரங்களை வெட்ட நேரும் நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சியர் அனுமதி பெறவேண்டியது கட்டாயமாக்கப்படும். பனை மேம்பாட்டு இயக்கம் 3 கோடி ரூபாய் செலவில் மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.