சென்னையில் உள்ள ஐபிஎஸ் அலுவலர்கள், காவல்துறையினரின் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி, அவர்களின் நட்பு பட்டியலில் உள்ள நபர்களிடம் அவசர தேவையாக ஐந்தாயிரம், பத்தாயிரம் ரூபாய் என தொகை கேட்டு ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
குறிப்பாக சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் அணையர் தினகரன், ஏடிஜிபி ரவி, ஐஜி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட ஐபிஎஸ் அலுவலர்களின் பெயரிலேயே முகநூல் கணக்கு தொடக்கி மோசடியில் ஈடுபட்ட கும்பல் தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. எனினும் கரோனா காலம் என்பதால் வேறு மாநிலத்துக்கு சென்று குற்றவாளிகளை கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், மூன்று மாதங்களுக்குப் பிறகு மோசடியில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முஷ்தகீன் கான், ஷகில் கான், ரவீந்திரநாத் ஆகியோரை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பலருக்கும் தெரிந்த ஒருவரை நோட்டமிட்டு அவரின் புகைப்படங்கள், தகவல்களை திருடி அந்த நபரின் பெயரில் முகநூல் பக்கத்தை உருவாக்கி, அவரது பக்கத்தில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் நட்பு அழைப்பு கொடுத்து, அதன் பிறகு அவசர தேவை என மோசடி செய்தது தெரியவந்தது. அதேபோல பல்வேறு பிரபலங்களின் முகநூல் பக்கங்களை ஹேக் செய்தும் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த மோசடியில் ஈடுபட்ட ராஜாஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் கேத்வாடா, சாசன், லேபுரா கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள், படிப்பறிவு இல்லாதவர்கள் என்பதால், இவர்களுக்கு முகநூலை எவ்வாறு பயன்படுத்துவது என்பது கூட தெரியாது. ஆனால், இவர்களுக்கு உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், மூளையாக செயல்பட்டு முகநூலை ஹேக் செய்தல், போலி சமூகவலைதள பக்கம் உருவாக்கி அதன் மூலம் மோசடி செய்வது குறித்து கற்றுக் கொடுத்துள்ளார்.
மேலும், கைதான இளைஞர்கள் கூகுள் பே, போன் பே போன்ற போன்ற செயலிகள் மூலம் பணத்தை பரிமாற்றம் செய்ய சொல்வதால் அடுத்தடுத்த தொலைபேசி எண்களுக்கு பணத்தை அனுப்பி, எடிஎம் மெஷின் மூலம் பணத்தை எடுத்துக் கொள்கின்றனர். இவ்வாறு தொலைபேசி எண்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதால், சிக்னல் மூலம் இவர்களை கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.