சென்னை திருவான்மியூர், பனையூர் பகுதிகளில் வெள்ளை நிற போதை பவுடரை சிறிய பாக்கெட்களில் வைத்து விற்பனை செய்து வருவதாக அடையாறு துணை ஆணையர் விக்கிரமன் அவர்களுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதை தொடர்ந்த திருவான்மியூர் காவல் ஆய்வாளர் ராமசுந்தரம் தலைமையிலான தனிப்படை தீவிர விசாரணையில் ஈடுபட்டது.
இந்நிலையில் திருவான்மியூர் ஜெயந்தி சிக்னல் அருகில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர் மீது சந்தேகமடைந்து அவரை சோதனை செய்ததில் அவரிடமிருந்து இரண்டு சிறிய வெள்ளை நிற போதை பவுடர் பாக்கெட்டுகளை காவல் துறையினர் கைப்பற்றினர்.
அதைத் தொடர்ந்து திருவான்மியூர் காவல் நிலையம் அழைத்து சென்று அவரை விசாரித்தபோது 21-வயதான ஆசிப் ராஜா என்பதும் இவர் NIFT-ல் பேஷன் டிசைனிங் படித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், அவர் தன் பாலின ஈர்ப்பு மற்றும் போதைக்கு அடிமையாகி உள்ளதால் அவருக்கு தெரிந்த பனையூரில் (SMS) எஸ்எம்எஸ் மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்த்துவரும் 35-வயதான மதி என்பவர் இந்த வெள்ளை நிறப் பவுடரை கொடுத்து விற்பனை செய்து வர சொன்னதாக கூறினார்.
ஆசிப் ராஜா கொடுத்த தகவலின் அடிப்படையில் மதி என்பவரை கைது செய்த தனிப்படையினர் அவரிடம் இருந்து இரண்டு சிறிய ஒரு கிராம் பவுடர்களை கைப்பற்றினர்.
பின்னர் மதியை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்ததில் எம்டிஎம்ஏ (MDMA) எனப்படும் ரசாயன வேதி பொருள் என்பதும் அதை சிறிய அளவில் நாக்கில் வைத்தால் அல்லது தண்ணீரில் கலந்து ஊசிகள் மூலம் எடுத்துக்கொண்டால் மூளை நரம்பில் பாதிப்பை ஏற்படுத்தி தன்னிலை மறந்து பல மணிநேரங்களில் போதையுடன் மனிதரை இருக்க வைக்கும்.
மேலும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை அதிக அளவில் பயன்படுத்தி போதை ஏற்றிக் கொள்வதற்கு பதிலாக வெள்ளை நிற பவுடரை சிறிய அளவில் எடுத்துக் கொண்டாலே அதிக நேரம் அதிக போதை தரும் என்பதாலும் போதை விரும்பிகள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் பணம் கொடுத்து வாங்குவதற்கும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, தன் பாலின ஈர்ப்பில் விருப்பமுடையவர் அதற்காக Grindr - Gay Chat என்ற அப்ளிகேஷனை பயன்படுத்தி வந்தனர். அதன் மூலம் எனக்கு ராயபுரம் பகுதியை சேர்ந்த 36 வயதான ஹுசைன் என்பவர் பழக்கமானார். அவர் மும்பையிலிருந்து போதைப் பொருளை வாங்கி செய்கிறார்.
சில முறை வெள்ளைநிற பவுடரை வாங்கி நான் பயன்படுத்தியபோது அதிக போதை தந்தது. நான் மெடிக்கலில் வேலை பார்ப்பதால் எந்த ஒரு சந்தேகமும்மின்றி போதை பவுடரை விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கும் எண்ணத்தில் அவரிடமிருந்து ஒரு கிராம் மூன்றாயிரம் ரூபாய்க்கு வாங்கி சிறிய அளவில் தண்ணீர் கலந்த ஊசியுடன் ஒரு எம்எல் (1ml) ரூபாய் 500க்கு விற்பனை செய்துவந்தேன் என வாக்குமூலம் அளித்தார்.
மதி அளித்த தகவலின் அடிப்படையில் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த ஹுசைன் என்பவரை கைது செய்த தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை செய்தனர்.
அப்போது அவர், குஜராத்தை சேர்ந்த நான் கடந்த 30 வருடங்களாக சென்னை ராயபுரம் பகுதியில் வசிக்கிறேன். கஸ்டமர் கேர் எக்ஸ்கியூட்டிவாக பணிபுரிகிறேன். Grindr - Gay Chat என்ற அப்ளிகேஷனை பயன்படுத்தி வந்தபோது தன்னைபோல விருப்பம் உள்ள நபர்களை தேர்வு செய்து அவர்களுடன் பேசி பழகி அவர்களை தன் பாலின ஈர்ப்புக்கு அழைப்பேன். வருபவர்களிடம் போதை பொருளை கொடுப்பேன்.
ஒருமுறை பயன்படுத்திய உடனே அந்த போதைக்கு அடிமையாகி மீண்டும் அவர்கள் கேட்கும்போது ஒரு கிராம் (MDMA) எம்டிஎம்ஏ எனப்படும் போதை பொருளை ஐந்தாயிரம் முதல் ஆறாயிரம் ரூபாய்வரை விற்பனை செய்வேன். ஒரு கிராம் அளவிலான சிறிய பாக்கெட்டில் உள்ள பவுடரை 40 முறைக்கு மேல் பயன்படுத்தி போதை ஏற்றிக்கொள்ளலாம். இந்தப் பவுடரை படித்த நபர்கள் மற்றும் இளைஞர்கள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கொடுத்து வாங்க தயாராக இருக்கிறார்கள்.
அவ்வப்போது மும்பைக்கு சென்று வந்தபோது அங்கு அறிமுகமான சிலர் மூலம் பனையூரை சேர்ந்த மதி பழக்கமானார். மதி மெடிக்கலில் வேலை செய்வதால் காவல் துறைக்கு சந்தேகம் வராது என்பதால் 2 பாக்கெட்களை கொடுத்து விற்பனை செய்ய சொன்னேன்” என்று கூறினார்.
இனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தனிப்படை காவல் துறையினர் அவரிடமிருந்த 8 போதை பவுடர் பாக்கெட்ட்உகள், போதை ஊசிகள், 3 செல்ஃபோன்கள், விற்பனைக்கு பயன்படுத்திய இரு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் மூவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பின்னர் கைபற்றப்பட்ட MDMA என்ற என்ற போதை பொருள் குறித்து ஆராய்ந்தபோது இவற்றை 5 மில்லி கிராம் அளவில் எடுத்துக்கொண்டால் மூளையில் மெத்திலோன் என்ற வேதிப்பொருளை தூண்டி 10 நிமிடங்களிலேயே மயக்க நிலையை ஏற்படுத்துவதும் அதன் பின்னர் ஒரு நாள் முழுதும் அந்த பாதிப்பு இருக்கக்கூடும் என்றும் தெரியவந்தது.
மேலும், அதனைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் நபரின் மூலையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி செயலிழக்க செய்யும். அதிக அளவில் எடுத்துக் கொள்ளும்போது சிலநேரங்களில் உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது. இது கஞ்சா போன்ற போதைப் பொருளை விடவும் மிகுந்த அபாயகரமானது என்கின்றனர் மருத்துவர்கள்.