தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் 2012, 2017, 2018, 2019 ஆண்டுகளில் நடத்தப்பட்ட இரண்டாம் நிலை காவலர் தேர்வுகளில் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகிய அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள் மீது சிறு குற்ற வழக்குகள் கடந்த காலங்களில் இருந்ததால் காவல்துறை பணிக்கு எடுக்கவில்லை.
நீதிமன்றத்தால் நிரபராதிகள் என தீர்ப்பு வழங்கிய பிறகுதான் பணிக்கு எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், நீதிமன்றத்தால் நிரபராதி என தீர்ப்பு கூறிய பிறகும் அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை.
இதனால், உடனடியாக தங்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று கூறி நேற்று மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் 67 பேர் புகார் கொடுக்க வந்தனர்.
அதில், மூன்று பேரை மட்டுமே டிஜிபி அலுவலக காவலர்கள் உள்ளே அனுமதித்தனர். பிறகு தங்களுடைய கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
பின்னர் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், "தேர்வில் வெற்றி பெற்றும் தற்போது வரை வேலை கிடைக்காத காரணத்தினால் கட்டிட வேலை போன்ற தின கூலி வேலைகளுக்குச் சென்று தங்களது குடும்பங்களை காப்பாற்றி வருகிறோம்.
இதில், போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் தங்களது குடும்பங்களை காப்பற்ற முடியவில்லை. இப்போது எங்களுக்கு வேலையை வழங்குமாறு டிஜிபி அலுவலகத்திலும் தலைமைச் செயலகத்திலும் மனு அளித்துள்ளோம். எங்களைப் போல் தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றனர்.