சென்னை: அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம் வெளியிட்டுள்ள தகவலில், "இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தில், அகில இந்திய குடிமைப் பணிகளில் அடங்கிய முதல்நிலை, முதன்மைத் தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, கிராமப்புரங்களிலுள்ள, சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள, ஏழை, எளிய ஆர்வலர்களுக்குப் பயனளிக்கும் வகையில், இப்பயிற்சி மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி முதல் மார்ச் 8ஆம் தேதி வரை, இந்திய வனப்பணி தேர்விற்காக 12 ஆர்வலர்கள் தங்கி பயின்றனர். அவர்களில் மூன்று மகளிர் ஆர்வலர்கள் உள்பட எட்டு ஆர்வலர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்திய வனப்பணி முதன்மைத் தேர்வில் தேர்ச்சிப்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு இப்பயிற்சி மையத்தின் மூலம் நேர்முகத்தேர்வு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பணியிலுள்ள மற்றும் ஓய்வு பெற்ற அகில இந்திய குடிமைப் பணி அலுவலர்களாலும், தலை சிறந்த வல்லுநர்களாலும் இந்த பயிற்சி நடத்தப்பட உள்ளது.
இது, தேர்ச்சி பெற்றுள்ள ஆர்வலர்கள், தங்களது நேர்முகத் தேர்வை சிறப்பான முறையில் எதிர்கொள்ள ஏதுவாக அமையும். இப்பயிற்சி மையத்தின் மூலம் தேர்ச்சி பெற்றுள்ள ஆர்வலர்கள் தவிர, வனப்பணி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள பிற ஆர்வலர்களும், இந்த பயிற்சியில் பங்கேற்கலாம். இதற்கென கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை.
அவ்வாறு பங்கு பெற விரும்பும் ஆர்வலர்கள், aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 9444286657 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ அல்லது 044-24621909 என்ற தொலைபேசி எண்ணிற்குத் தொடர்பு கொண்டு விவரங்களைத் தெரிவிக்கலாம்.
மாதிரி ஆளுமைத் தேர்விற்கான தேதி குறித்த விவரங்கள் இப்பயிற்சி மையத்தின் www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும். பயிற்சி மையத்தால் நடத்தப்படும் மாதிரி நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு டெல்லி செல்லும் ஆர்வலர்களுக்குப் பயணச் செலவு தொகையாக 5ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் 10 முக்கிய அறிவிப்புகள்!