ஆவடியில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ”வரும் 1 ஆம் தேதி மோடி தமிழகம் வந்து விட்டு டெல்லி திரும்பியதும், தேர்தல் அறிவிப்பு வந்து விடும். எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு இறுதியாக ஈமச்சடங்கு செய்ய மோடி வருகிறார். ஜெயலலிதா மறைவிற்கு வந்த மோடி, சசிகலா தலையில் கைவைத்தார். பிறகு, அவர் 4 ஆண்டுகள் சிறைக்கு போனார். தற்போது, ஓபிஎஸ்-இபிஎஸ் தலையில் மோடி கை வைத்துள்ளார். ஆகவே, அவர்கள் இருவருக்கும் ஜெயில் ரெடியாகி கொண்டிருக்கிறது.
2014ல் ஆட்சிக்கு வரும் போது பெட்ரோல், டீசல் விலையை பாதியாக குறைப்பதாக கூறிய மோடி, கடந்த ஓராண்டில் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளார். அதேபோல, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 15 லட்சமு, 2 கோடி பேருக்கு வேலையும் கொடுப்பதாக கூறினார். கொடுத்தாரா? லாபகரமாக இயங்கும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் அதானி, அம்பானிக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நெய்வேலி மின் நிலையத்தில் 1,339 பேரை வேலைக்கு எடுத்தனர். இதில், 8 பேர் தான் தமிழர்கள். அதுவும் அவர்கள் அனைவரும் முற்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள். மேலும், ரயில்வே, தபால் துறைகளில் நமக்கு வேலை கிடையாது. தமிழகத்தில் உள்ள வங்கிகளில் பணியாற்றும் பலரும் இந்திக்காரர்களாகவே உள்ளனர். இதனை தட்டிக்கேட்க, இன்று கலைஞர் இல்லை.
இன்றைய ஆட்சியாளர்கள் மோடியின் காலில் விழுந்து கிடக்கிறார்கள். எதிர்க்கட்சியாக திமுக நடத்தும் கடைசி போராட்டம் இதுதான். ஆளுங்கட்சியாக வந்தவுடன், மாநில உரிமைகளுக்காக மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்துவோம். அதிலும் திமுகவே வெற்றி பெறும்” என்று பேசினார்.
இதையும் படிக்க: ‘ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்க வாய்ப்பில்லை’ -அமைச்சர் ஜெயக்குமார்!