இயக்குநரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், டிராபிக் ராமசாமி என்ற படத்தை ரிலீஸ் செய்ததில் மோசடி செய்ததாகச் சென்னை காவல் ஆணையரிடத்தில் தயாரிப்பாளர் மணிமாறன் என்பவர் புகார் அளித்திருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கமளிக்க இன்று காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார் இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இரண்டு நாட்களாக எஸ்.ஏ.சந்திரசேகர் பண மோசடி என்று செய்திகளில் வருகின்றன. நான் 40 வருட காலமாக சினிமாவில் இருக்கிறேன். இத்தனை வருடங்களில் நான் யாருக்காவது பாக்கி வைத்திருக்கிறேன் என்று செய்திகள் வந்ததுண்டா.
"டிராபிக் ராமசாமி என்கிற படத்தை நான் தயாரித்தேன். அதன் விளம்பரங்கள் நன்றாக உள்ளது எனவே அதை நான் வெளியிடுவதாக அதன் உரிமையைக் கனடாவிலுள்ள ஆனந்த் சுப்பிரமணி என்ற நண்பர் கூறினார். அதற்கு 50 லட்சம் தருவதாகக் கூறி ஒப்பந்தம் போடப்பட்டது."
"ரிலீஸ் தேதிக்கு 10 நாளுக்கு முன் என்னால் பணம் தர முடியவில்லை என்று ஆனந்த் சுப்பிரமணி கடிதம் அனுப்பினார். வேறு வழியில்லாமல் கடைசி நேரத்தில் நானே படத்தை ரிலீஸ் செய்தேன். இதனால் எனக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டது என்று எனக்குத்தான் தெரியும்."
"அதற்கு பிறகு ஒரு வருடம் கழித்து புகார் கொடுக்கும் மணிமாறன் யார். அவருக்கும் படத்தின் வியாபாரத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. நான் சம்பாதித்த பெயருக்கு யாரோ களங்கம் விளைவிக்க நினைக்கிறார்கள். ஆனால் என்னுடைய வளர்ச்சியும் என்னுடைய குடும்பத்தின் வளர்ச்சியும் உயர்ந்து கொண்டுதான் இருக்கும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிக்கலாமே:#HBDSathyaraj: கேரக்டரையே புரிந்துகொள்ள முடியாத மகாநடிகன்