சென்னை மாவட்டம் ஆவடி அடுத்த கொள்ளுமேடு, ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (41). இவர் தனியார் நிறுவன ஊழியர். இந்நிலையில் தட்சணாமூர்த்தி தனது மனைவியுடன் வேலைக்கு சென்றுள்ளார். பின்னர், வீட்டில் அவரது மகள் ஜனனி(17) மகன்கள் ராகுல் (12), நித்தீஷ் (12) ஆகியோர் இருந்துள்ளனர். அப்போது, அவரது வீட்டிற்கு ஒரு பைக்கில் அடையாளம் தெரியாத நபர் வந்து உள்ளார்.
அவர் ஜனனியிடம், நான் உங்களது தந்தைக்கு நெருங்கிய நண்பர் எனவும், உங்கள் தந்தை எனக்கு ரூ.1.20 லட்சம் கடன் தர வேண்டும், அதற்கு பதிலாக அவர் நகையை தருவதாக கூறியிருந்தார்.
எனவே, அதை வாங்கி செல்வதற்காக வந்துள்ளேன் என கூறி உள்ளார். அதோடு மட்டுமல்லாமல், அவர் ஜனனி எதிரே செல்போனில் அவரது தந்தை தட்சிணாமூர்த்தியிடம் பேசுவது போல் நடித்துள்ளார். இதனை நம்பிய சிறுமி ஜனனி, வீட்டு பீரோவை திறந்து அங்கிருந்த இரு நெக்லஸ், ஒரு ஜோடி கம்மல் ஆகிய ஏழு சவரன் நகைகளை எடுத்து வந்து அவரிடம் கொடுத்துள்ளார்.
பின்னர் அந்த நபர் அதை வாங்கி கொண்டு பைக்கில் அங்கிருந்து சென்றுவிட்டார். இதன் பிறகு, மாலை வீடு திரும்பிய தட்சிணாமூர்த்தியிடம் மகள் ஜனனி நடந்ததை கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த தட்சிணாமூர்த்தி ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் ஆய்வாளர் நடராஜ் தலைமையில் காவலர்கள் வழக்கு பதிவு செய்து உள்ளனர். மேலும், காவல்துறையினர் நூதன முறையில் சிறுமியிடம் நகைகளை பறித்து சென்ற அடையாளம் தெரியாத நபரை அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் தேடி வருகின்றனர்.