சமீபத்தில் பள்ளி நிர்வாகங்களுக்கு சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி அனுப்பிய சுற்றறிக்கையில், "பள்ளிகளில் ஆசிரியர்கள், பணியாளர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களின் கோபத்தைக் கட்டுப்படுத்தவேண்டும். மாணவர்களிடம் கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது. பள்ளி வளாகங்களை கோபமற்ற, மகிழ்ச்சியான பகுதிகளாக மாற்ற வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிபிஎஸ்சி அமைப்பின் இந்த நோக்கம் மிகவும் வரவேற்கப்பட வேண்டியது என்றாலும்கூட, கல்வி முறையை சுமையற்றதாக மாற்றாமல், இது போன்ற அலங்கார அணுகுமுறைகள் பயனளிக்காது. பள்ளி வளாகங்களில் கோபம் ஏற்படுவதற்கானக் காரணங்களை அகற்றுவதுதான் இதற்கு சிறந்த தீர்வாக இருக்குமே தவிர, கோபத்தைக் கட்டுப்படுத்துவது முழுமையாக பயனளிக்காது.
குழந்தைகளை மழலையர் பள்ளிகளில் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை வாங்குவதற்காக முதல்நாள் இரவுமுதல் பெற்றோர்கள் வரிசையில் நிற்கத் தொடங்குவதில் இருந்துதான் கல்வியின் சீரழிவு தொடங்குகிறது. மழலையர் வகுப்புகளிலும், தொடக்கக் கல்வியிலும் மாணவர்களுக்கு பல்வேறு சிறப்புப் பயிற்சிகள், 12ஆம் வகுப்புக்கு பிறகு எழுதவிருக்கும் பல்வேறு தேர்வுகள் என மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மனஉளைச்சலை ஏற்படுத்தக்கூடிய விஷயங்கள் ஆயிரம் இருக்கிறது.
(தாய்மொழியில் கல்வி வழங்குவதை தவிர்த்து விட்டு, ஆங்கில வழியில் கல்வி வழங்குவதை விட மோசமான தண்டனையை மாணவர்களுக்கு வழங்கமுடியாது. அனிச்சையாக வரும் வார்த்தைகளையும், சிந்தனைகளையும் அடக்கிக்கொண்டு, தங்களுக்கு சம்பந்தமே இல்லாத இன்னொரு மொழியில் பேச வேண்டும், சிந்திக்க வேண்டும் என்பது எவ்வளவு கொடுமையானது?)
உலகிலேயே தரமான, சிறப்பான கல்வி பின்லாந்தில் வழங்கப்படுகிறது. அங்கு மழலையர் கல்வி இல்லை, ஆங்கில வழிக் கல்வி இல்லை, அதிக மதிப்பெண் எடுக்க வேண்டிய கட்டாயமோ, தரவரிசையோ இல்லை. இவ்வளவுக்குப் பிறகும் அங்கு படிப்பவர்கள் புத்திசாலிகளாகவும், சிந்திக்கும் திறன் கொண்டவர்களாகவும் உள்ளனர். ஆனால், இவ்வளவு இருந்தும் இந்தியக் கல்வி முறையில் பயில்பவர்கள் ஏட்டு சுரைக்காய்களாக மட்டும்தான் விளங்குகின்றனர்.
சுருக்கமாக கூற வேண்டுமானால், மலர்களாகக் கையாளப்பட வேண்டிய மாணவர்களை, மனிதர்களாகக் கூட கையாளாமல், மதிப்பெண் இயந்திரங்களாக கையாளுவதுதான் அனைத்திற்கும் காரணம். இந்தநிலையை மாற்ற வேண்டும். அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்யவேண்டும். கல்வியை சுகமானதாகவும், சுமையற்றதாகவும் மாற்றவேண்டும். அதன்மூலமாக தான் பள்ளிகளைக் கோபம் இல்லாத, மகிழ்ச்சி நிறைந்த பகுதிகளாக மாற்ற முடியும் என்பதை அரசுகள் உணர வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'மாணவர்களைத் தூண்டிவிட்டு பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் திமுக...!'