சென்னை சத்தியமூர்த்தி பவனில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, "இந்திய அரசின் சிறப்பு தன்மை அனைவரையும் அரவணைத்து கொள்வதுதான். இந்திய குடியுரிமை திருத்த சட்டம் மிகவும் தவறானது. பாகிஸ்தான் செய்த அதே தவறை மோடியும், அமித்ஷாவும் செய்கின்றனர்.
இந்த மண்ணில் 50 ஆண்டு காலம் வாழ்ந்தவர்களை இன்று நீங்கள் இந்தியனா, வந்தேறியா என்று கேட்பது எந்த வகையில் நியாயம். இந்து உணர்வு உண்மை என்றால் இலங்கையிலிருந்து வரும் தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை வழங்கப்படவில்லை. அதிமுக, பாமக ஆதரவால்தான் குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எடப்பாடி அரசாங்கம் அடிமையான அரசாங்கம், பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகின்றது. ஹிட்லர் நிலைதான் இனவாதிகளுக்கு ஏற்படும்.
திமுக கூட்டணி நடத்தும் பேரணி உலகத்திற்கு மோடியின் தவறை சுட்டிக்காட்டும் பேரணியாக இருக்கும். விவசாய நிலையங்களில் மின் கோபுரம் அமைப்பதில் அரசாங்கம் பெருந்தன்மை காட்ட வேண்டும்.
இலங்கை தமிழர்களுக்கு ஏன் காங்கிரஸ் குடியுரிமை வழங்கவில்லை என்பதற்கும் தற்போது நடப்பதற்கும் தொடர்பு இல்லை. அப்போது யாரும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை” என்றார்.