சென்னை: ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றிய அதிமுக மாணவர் அணி முன்னாள் பொருளாளரான சி.பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில்,
'நாளை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உட்கட்சி தேர்தல் நடத்துவதற்கு முன்பாக 21 நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டுமென்ற கட்சி விதிகள் முறையாக பின்பற்றபடவில்லை எனவும், இயற்கை நீதிக்கு எதிராக தேர்தல் அறிவிக்கபட்டுள்ளதாகவும், இதனால் கட்சி உறுப்பினர்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தங்களுடைய பதவியைத் தக்க வைத்துக்கொள்ளும் உள்நோக்கத்துடன் தேர்தல் ஆணையர்களாக பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரை நியமித்துள்ளது தவறு எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
எனவே, கட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யவும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் முடிவுகளை வெளியிடத் தடைவிதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
தேர்தல் அறிவிப்புக்குத் தடை விதிக்க வேண்டும்
இந்த வழக்கு இன்று உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மணிமேகலை முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் கட்சியின் உறுப்பினர்களை முறைபடுத்தப்படவில்லை, உறுப்பினர் அட்டை வழங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், வாக்களிக்கத் தகுதியான உறுப்பினர்களின் பட்டியல் இதுவரை முறையாக தயாரிக்கப்படவில்லை என்பதால் தேர்தல் அறிவிப்புக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அதிமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் விஜய நாராயணன் மற்றும் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி மனுதாரர் அதிமுகவில் இருந்து திமுக சென்று, அதன் பின் அமமுகவில் இருந்து விலகி, தற்போது சசிகலாவுடன் இருப்பதாகவும், அதனை மனுவில் மறைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், மனுதாரர் கட்சியின் உறுப்பினரே இல்லை என்றும், அவர் இந்த வழக்குத் தொடர உரிமையில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பளர் பதவிகளுக்கு ஓ.பி.எஸ்.மற்றும் ஈ.பி.எஸ்.போட்டியின்றி தேர்வு செய்யபட்டதாக மெமோ தாக்கல் செய்யப்பட்டது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால், அவர்கள் நடவடிக்கைகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் அணுகலாம் என அறிவுறுத்திய நீதிபதி, மனு தொடர்பாக அதிமுக மற்றும் தேர்தல் ஆணையர்கள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் விரிவான விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
இதையும் படிங்க: இட்லி விற்று குடும்பத்தைத் தாங்கும் அலமேலு அம்மா - இது ஓர் சாமானியரின் கதை!