அதிநவீன தொழில் நுட்பங்களுடன் உருவான 'தி லயன் கிங்' படத்தின் தமிழ் பதிப்பின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் அரவிந்த்சாமி, சித்தார்த், ரோபோ சங்கர், சிங்கம் புலி ஆகியோர் கலந்து கொண்டனர். இத்திரைப்படம் வரும் ஜூலை 19ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
தமிழில் சித்தார்த் (சிம்பா), அரவிந்த்சாமி (ஸ்கார்), ரவிஷங்கர் (முஃபாஸா), ஐஸ்வர்யா ராஜேஷ் (நாளா), ரோகிணி, சிங்கம் புலி (டிமோன்), ரோபோ சங்கர் (பும்பா), மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களுக்கு டப்பிங் செய்துள்ளனர்.
நடிகர் அரவிந்தசாமி பேசுகையில், "25 வருடங்களுக்கு முன்பு சிம்பாவுக்கு டப்பிங் குரல் கொடுத்தேன். ஒரு புதுமையான அனுபவத்துக்காக அப்போது டப்பிங் செய்தேன். நடிகன் என்றாலே எல்லா விதமான விஷயங்களையும் செய்ய வேண்டும் என விரும்புகிறேன் அதில் டப்பிங் உட்பட முக்கியமாக வில்லன் கதாபாத்திரத்துக்கு டப்பிங் பேசும்போது குரலில், பேச்சு வழக்கில் நிறைய வித்தியாசங்களை செய்ய முடியும்" என்றார்.
நடிகர் சித்தார்த் பேசுகையில், "என் முகத்தை மட்டுமே பார்த்து பார்த்து டப்பிங் செய்து போர் அடித்து விட்டது. இது கொஞ்சம் புதுமையாக இருந்தது. வாழ்க்கை ஒரு வட்டம். தேவையான நேரத்தில் தேவையான விஷயங்கள் நடப்பது போன்ற மிகச்சிறந்த விஷயங்கள் இந்த படத்தின் மூலம் சொல்லப்பட்டிருக்கிறது. மக்களை போலவே நானும் இந்த படத்தை பெரிய திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்" என்றார்.