சென்னை: அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் செயல்பட்டு வந்த ஓ.பன்னீர்செல்வம், கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் செயற்குழு தீர்மானத்தின்படி ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமி, பொதுச்செயலாளராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து பொதுக்குழுவுக்கு தடை கோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தொடர் சட்ட போராட்டங்களுக்கு பிறகு நடைபெற்ற பொதுக்குழுவில் ஜூலை 11ல் சிறப்பு பொதுக்குழு நடத்த உறுப்பினர்களால் தீர்மானிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கூட்டம் நடத்த அனுமதி வழங்கியது.
இடைக்கால தடை கோரி மீண்டும் உயர்நீதிமன்றத்தை அணுகினார் ஓ. பன்னீர்செல்வம், அனைத்தையும் பரிசீலித்த நீதிமன்றம், கூட்டம் நடத்த அனுமதி வழங்கியது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில்,பொதுக்குழு தொடங்குவதற்கு முன் அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றிய முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், தலைமை அலுவலகம் அமைந்துள்ள அவ்வைசண்முகம் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் பேருந்துகளை அடித்து நொறுக்கினர்.
இதனால் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக, குற்றவியல் நடைமுறை சட்டம் 146ன் படி முறையான அறிவிப்புக்கு பிறகு, அதிமுக தலைமை அலுவகத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் சாய் வர்தினியின் உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டது. அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது தொடர்பான உத்தரவை முறைப்படி தலைமை நிர்வாகிகளுக்கு அறிவிக்கும் விதமாக ஏற்கனவே பன்னீர்செல்வத்திடம் நோட்டீஸ் அளிக்கப்பட்ட நிலையில், நோட்டீசை எடப்பாடி பழனிச்சாமியிடம் அளிப்பதற்காக நடைமுறைகளும் நடந்த வருகிறது.
குற்றவியல் நடைமுறை சட்டம் 146: குற்றவியல் நடைமுறை சட்டம் 146ன்படி குறிப்பிட்ட இடத்திற்காக இரு தரப்பினரிடையே சமரசம் இல்லாமல் மோதல் தொடரும் பட்சத்தில், மாஜிஸ்திரேட் (மாவட்ட ஆட்சியர்) தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி குறிப்பிட்ட இடத்துக்கு சீல் வைக்கலாம். அவ்வாறு கட்டிடத்திற்கோ இடத்திற்கோ சீல் வைக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர்கள் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி யாருக்கு இடத்தின் மீது உரிமை உள்ளது என முடிவு செய்ய வேண்டும்.
அதிமுக அலுவகத்தின் மீது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடைக்கால பொதுச்செயலாளர் பழனிச்சாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு உரிமை உள்ளதா? என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்கும் பட்சத்தில், உரிமை உள்ள நபருக்கு அதிமுக அலுவலகத்தை நிர்வகிக்கும் அதிகாரம் நீதிமன்றத்தால் வழங்கப்படும்.
நீதிமன்ற உத்தரவு வரும் இடைப்பட்ட காலத்தில் கட்டடத்தின் உரிமை வருவாய் கோட்டாட்சியர் வசம் ஒப்படைக்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால், தலைமைக்கு நடந்த போராட்டத்தை போல கட்சி அலுவலகத்தை கைப்பற்றவும் தீவிரமாக இருதரப்பினரும் உரிமையியல் நீதிமன்றத்தை விரைவில் அணுகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு - பொதுக்குழு கூட்டத்தில் முடிவு