கரோனா வைரஸ் தொற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த, கோடம்பாக்கம் மண்டலத்தில் பொதுமக்களுக்கு ஆட்டோக்கள் மூலம் கபசுரக் குடிநீர், மூலிகை கஷாயம் வழங்கும் பணியை கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராதாகிருஷ்ணன், “போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து படிப்படியாக சென்னையில் கரோனா தொற்றைக் குறைத்து வருகிறோம். ராயபுரத்தில் அதிக பாதிப்புள்ள 10 தெருக்களைக் கண்டறிந்து தனி திட்டம் வகுத்து செயல்படுத்தி வருகிறோம்.
அதிக தொற்று பாதிப்புள்ள கோடம்பாக்கம் மண்டலத்திலும் பகுதிவாரி திட்டமிடல் பணி தொடங்கப்பட்டுள்ளது. இம்மண்டலத்தில் உள்ள வார்டு 127 மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இந்தப் பகுதியில் ஏற்கனவே மாத்திரைகள், கபசுரக் குடிநீர், முகக்கவசம் முதலியவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்திய மருத்துவத் துறையுடன் இணைந்து புதிதாக மூலிகை கஷாயம், இப்பகுதியில் வழங்கப்பட்டு 4,5 நாள்களுக்குள் நோய்த் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய பிரகாஷ், “கோடம்பாக்கம் மண்டலம் வார்டு 127இல் மட்டும், 152 நபர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இப்பகுதியில் தனிக் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த வார்டில் உள்ள அனைவருக்கும் தொடர்ந்து 10 நாள்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்படும். 10 நாள்களில் கரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வருவதே மாநகராட்சியின் முதல் நோக்கம். இந்த கபசுரக் குடிநீரால் நல்ல முன்னேற்றம் இருப்பதைக் காண முடிகிறது“ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கூடுதல் ஆணையர் உள்பட 146 காவலர்களுக்கு கரோனா!