சென்னை: கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரான கோவையைச் சேர்ந்த முகமது ரஃபிக்குல் ஹாசன் என்பவர் மீது தேசிய புலனாய்வு முகமை 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
ஏற்கனவே இவ்வழக்கு தொடர்பாக 4 குற்றவாளிகள் மீது இரண்டு குற்றப்பத்திரிகையை தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்திருந்தது.
தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் நடத்திய விசாரணையில் சசிகுமார் மீது தாக்குதல் நடைபெறும்போது முகமது ரஃபிக்குல் ஹாசன் தான் சுபைர் என்பவரை இருசக்கர வாகனத்தின் பின்னால் ஏற்றிக்கொண்டு வாகனத்தை ஓட்டினார் என்பதை கண்டறிந்ததன் அடிப்படையில் முகமது ரஃபிக்குல் ஹாசன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது
இவ்வழக்கில் கைதான 5 பேரும் கோவையிலுள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், கோவை சங்கனூர் பகுதியில் இந்து முன்னணி கொடிகள் ஏற்றப்படும் இடத்தில் ஏற்றப்பட்ட எஸ்.டி.பி.ஐ கொடிகளை அகற்ற போராட்டங்களை முன்னெடுத்த சசிகுமாரை பழிவாங்கும் நோக்குடன் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் தேசிய புலனாய்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது.
கொலைச் சம்பவத்தை அரங்கேற்றிய பின்னர் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முகமது ரஃபிக்குல் ஹாசன் ஓமன் நாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டதாகவும், ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவிற்கு வந்த அவரை டெல்லியில் வைத்து கைது செய்ததாகவும் தேசிய புலனாய்வு முகமை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காணாமல் போனவர் சொந்த வீட்டிலேயே எலும்புக்கூடாக கண்டெடுப்பு!