சென்னை நட்சத்திர ஹோட்டலில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் தேசிய கட்சிகளை தவிர, மாநில கட்சிக்கும் ஆட்சிக்கும் பொறுப்புக்கும் ஒருவரே தலைவராக இருக்கிறார்.
ஆனால் ரஜினி காந்த் கட்சியில் கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை இருக்கும். ஆட்சியாளர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள். கட்சித் தொண்டர்கள் கட்சித் தலைவரையும், மக்கள் ஆட்சியாளர்களையும் கேள்வி கேட்கலாம்.
முதலமைச்சர் பதவி குறித்து என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது. அதுகுறித்த எண்ணம் எனது மனதில் இல்லை. நல்ல சிந்தனை, தொலைநோக்கு பார்வை, அன்பு, பாசம், தன்மானம் கொண்டவரை முதலமைச்சராக உட்கார வைப்போம்.
கட்சித் தலைவர் எதிர்கட்சி தலைவர் மாதிரி செயல்படுவார். ஆட்சியாளர் செய்யும் பணிகளில் தவறு இருந்தால் சுட்டிக் காட்டுவோம். ஆனால் அவர்களின் பொறுப்புகளில் தலையிட மாட்டோம்.
முக்கிய தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாள் உள்ளிட்டவற்றை கட்சித் தலைமை பார்த்துக்கொள்ளும். ஆட்சியாளர்கள் மக்கள் பணிகளில் மட்டுமே பணி செய்வார்கள்.
நான் முதலமைச்சர் பதவியை தியாகம் செய்வது போலவும், இது அரசியல் என்றும் சிலர் நினைக்கலாம்.
ஆனால் இதைப்பற்றி நான் அன்றே தெளிவுப்படுத்தி உள்ளேன். இது பற்றி நான் அப்போதே வெளிப்படையாக பேசியுள்ளேன்.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.