திமுக தோழமை கட்சிகளின் கூட்டம் காணொலி காட்சி மூலம் இன்று மாலை நடைபெற்றது. அதில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், கொங்கு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன், ஐஜேக தலைவர் பாரிவேந்தர், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சித் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திமுக தோழமை கட்சி கூட்டத்தில் நான்கு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி,
- இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 50 விழுக்காடு இடஒதுக்கீட்டை, எந்தவித குறைபாடும் இன்றி, மத்திய பாஜக அரசு உடனடியாக செயல்படுத்திட வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு அதிமுக அரசு அழுத்தம் கொடுத்து இட ஒதுக்கீட்டை பெற்றிட வேண்டும்.
- இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு சட்டப் போராட்டத்தை ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடங்கியுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளையும், பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களையும் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்திடும் சூழலை பாஜக அரசு ஏற்படுத்திட வேண்டாம் என்று இக்கூட்டம் எச்சரிக்கிறது.
- கரோனா நோய்த் தடுப்பிலும், ஊரடங்குக்கு பிறகான செயல் திட்டத்திலும் தோல்வியடைந்த மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்தும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் “புதிய மின்சாரத் திருத்தச் சட்டம் 2020-ஐ“ திரும்பப் பெறவேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
- கரோனா வைரஸ் பரவலை தடுக்க மருத்துவர், செவிலியர், தூய்மைப் பணியாளர், சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினரின் சேவைக்கு பாராட்டுக்கள். இவ்வாறு அந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.