உலகின் முன்னணி மின்சாரக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, இந்தியவில் தனது செயல்பாடுகளைத் தொடங்க நீண்ட நாட்களாக திட்டமிட்டு வருகிறது. இருப்பினும், பல்வேறு காரணங்களால் அது தடைப்பட்டு வந்தது. இந்த நிலையில், 2021 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தனது விற்பனையைத் தொடங்கவுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரும், அண்மையில் உலகப் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தை பிடித்தவருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதனை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரியும் உறுதிப்படுத்தியுள்ளார்.
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் விற்பனையை தொடங்க உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கு சரியான இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக மத்திய அரசு மற்றும் மஹாராஷ்டிரா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய 5 மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சிஎன்பிசி டிவி 18 தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், இந்தியாவில் உற்பத்தி மையம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பது தொடர்பாக அந்நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக் கூறப்பட்டுள்ளது.
தெற்காசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் சென்னை, நாட்டிலேயே வாகன உற்பத்தியில் முன்னணி வகிக்கிறது. உலகின் ஆட்டோமொபைல் உற்பத்தி செய்யும் பகுதிகளில் முதல் 10 இடங்களில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தியில் 35 விழுக்காடு பங்கும், நாட்டின் ஆட்டோமொபைல் ஏற்றுமதியில் 45 விழுக்காடு பங்கும் வகிக்கிறது.
வாகன உற்பத்தி தொடர்பான 1300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளதாக தமிழ்நாடு அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஹூன்டாய், பிஎம்டபிள்யு, டையம்லர், ரேனால்ட்- நிசான், ஃபோர்டு, அஷோக் லேலாண்ட், டிவிஎஸ், யமஹா உள்ளிட்ட உலகின் முன்னணி வாகன நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்துவருகின்றன.
மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட மின்சார வாகனக் கொள்கையில், மின்சார வாகன உற்பத்தித் துறையில் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கவும், இதன்மூலமாக 1.5 லட்சம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்கள், பேட்டரி, உதிரிபாக உற்பத்தி மற்றும் இது தொடர்பான ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும் திட்டமிட வேண்டும் என இந்த கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்காக தமிழ்நாடு அரசு வழங்க முன்வரும் சலுகைகள் பின்வருமாறு:
- மாநிலத்துக்குள்ளேயே வாங்கும் வாகனங்களுக்கு 2030 ஆம் ஆண்டு வரை மாநில ஜிஎஸ்டி வரியிலிந்து 100 விழுக்காடு விலக்கு அளிக்கப்படும்
- மின்சார வாகனம் மற்றும் சார்ஜிங் தொடர்பான உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு 2025 வரை 15 விழுக்காடு முதலீட்டு மூலதனம் வழங்கப்படும்.
- மின்சார வாகனம் மற்றும் சார்ஜிங் தொடர்பான உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு 2025 ஆம் ஆண்டு வரை 100 விழுக்காடு மின்சார வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
- மின்சார வாகனம் மற்றும் சார்ஜிங் தொடர்பான உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்கள் உற்பத்தி செய்ய நிலத்தை கையகப்படுத்தும் போது 100 விழுக்காடு முத்திரைத் தாள் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
- சிப்காட், சிட்கோ அல்லது அரசு துறைகளிடம் இருந்து நிலம் வாங்கும் மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு நிலத்தின் மதிப்பின் மீது 15 விழுக்காடு சலுகை வழங்கப்படும். தென் தமிழ்நாட்டில் நிலம் அமைந்திருந்தால் 50 விழுக்காடு வரி விலக்கு வழங்கப்படும்.
- அதிக வேலைவாய்ப்பு வழங்கும் மின்சார வாகன நிறுவனங்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொகை, நிறுவனத்துக்கு பதிலாக அரசு சார்பில் ஓராண்டுக்கு வழங்கப்படும்.
- மின்சார வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு 20 ஆண்டுகளுக்கு 20 விழுக்காடு மூலதன மானியமும், நிலத்தின் மீது 50 விழுக்காடு மானியமும் வழங்கப்படும்.
- இது தவிர மின்சார வாகனங்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்காக பிரத்யேக உற்பத்தி பூங்கா அமைக்கப்படும் என 2019 தமிழ்நாடு மின்சார வாகன கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்சார வாகன பூங்கா
திருவள்ளூர் மாவட்டம், குமிடிப்பூண்டி தாலுக்காவைச் சேர்ந்த மணலூர் மற்றும் சூரப்பூண்டி ஆகிய பகுதிகளில் 691 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழிற்பேட்டை அமைகிறது. இதில், 90 விழுக்காடு தொழிற்சாலைகள் மின்சார வாகன உற்பத்தி மற்றும் ஆட்டோமொபைல் உதிரி பாகம் தயாரிப்பு துறையில் ஈடுபடும் நிறுவனகளுக்கு ஒதுக்கப்படும் என சிப்காட் மூத்த அலுவலர் ஒருவர் கூறியுள்ளார்.
அண்மையில், மின்சார வாகன உற்பத்தியில் உலகளவில் முன்னணியில் உள்ள மற்றொரு நிறுவனமான சீனாவைச் சேர்ந்த பிஓய்டி மற்றும் ஓலா நிறுவனத்தின் மின்சார வாகன உற்பத்திக்கு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெஸ்லா வாகன உற்பத்தி மையத்தை ஈர்ப்பத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலம் முன்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.