சென்னையில் தனியாக வீட்டில் வசிக்கும் பெண்களை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, கொள்ளையடிக்கும் பிரபல கொள்ளையனுக்கு, பாலியல் வன்கொடுமை வழக்கில் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரைச் சேர்ந்த பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி அறிவழகன். பொதுவாக வீடு புகுந்து திருடும் கொள்ளையர்கள் ஆள் இல்லா வீட்டை கண்காணித்து கைவரிசை காட்டுவார்கள். ஆனால், கொள்ளையன் அறிவழகன், பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை மட்டும் குறிவைத்து புகுந்து கொள்ளையடிப்பதும், அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்வதையும் பாணியாகக் கொண்ட குற்றவாளி ஆவார்.
கடந்த 2017-ல் ஆண்டு அறிவழகன் சைதாப்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்ட போது, அவன் போலீசாரிடத்தில் அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், தான் பகல் நேரத்தில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு பின், வீட்டில் உள்ள நகைகளையும் கொள்ளையடித்து சென்றுவிடுவேன் என்று தெரிவித்துள்ளான்.
சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி போன்ற பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அறிவழகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். கொள்ளையன் அறிவழகன் பெண்களை சீண்டுவதற்கு ஒரு காரணத்தையும் வாக்குமூலத்தில் அப்போது தெரிவித்தான்.
இது போன்று நடந்ததால் அவமானமாகக் கருதி, புகார் அளிக்க வர மாட்டார்கள் என அவ்வாறு பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாகத் தெரிவித்தான். அதன் பிறகு இவ்வழக்குகளில் சிறையில் இருந்து வெளிவந்த அறிவழகன் கடந்த 2019-ல் அம்பத்தூர் பகுதியில் இதே பாணியில் கைவரிசையை காட்டியபோது மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டான்.
இந்த நிலையில், 2017-ல் ஆண்டு தியாகராயர் நகரில் 25 வயது பெண்ணை வீட்டிற்கு புகுந்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கொள்ளையன் அறிவழகனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 15 ஆயிரம் அபராதமும் விதித்து மகிளா நீதிமன்றம் இன்று (செப்.21) உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் கஞ்சா விற்ற தேனியைச்சேர்ந்த நால்வருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை