சென்னை: தமிழ்நாட்டில் அமலில் உள்ள ஊரடங்கின்படி வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு பாஜக உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, வார இறுதி நாள்களில் கோயில்களை திறக்க அனுமதி வழங்குமாறு கோரிக்கை வைத்து வந்தனர். ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின்படியே வார இறுதி நாள்களில் கோயில்கள் மூடப்பட்டுவருகின்றன எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.
இதனிடையே, கோயம்புத்தூர் பீளமேடு பகுதியை சேர்ந்த ஆர்.பொன்னுசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், விஜயதசமி அக்டோபர் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருவதால், அன்றைய தினம் கோயில்களை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு அரசு தரப்பிலிருந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று(அக்.14) தமிழ்நாடு அரசு கோயில்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி நாளை முதல் கோயில்கள் திறக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க: கோயில்கள், பள்ளிகள் திறப்பு: முதலமைச்சரின் முடிவு என்ன?