சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கானா சபாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு, அகில இந்திய தமிழ் சான்றோர் பேரவை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் பாண்டியராஜன், சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் சரத்குமார் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டு பாராட்டு உரை வழங்கினர்.
இந்த விழாவில் பேசிய சரத்குமார், "தமிழிசையின் உழைப்புக்கு கிடைத்த வெற்றிதான் ஆளுநர் பதவி. அவரை நான் உழைப்பாளியாக பார்த்திருக்கிறேன். அவரின் உழைப்பு தெலங்கானா மாநிலத்தை உயர்த்தும். தெலங்கானா மாநிலம் அறிவு, ஆற்றல், திறமை ஆகிய மூன்றும் முழுமையாக உள்ள ஒருவரை ஆளுநராக பெற்றிருக்கிறது. குக்கிராமங்களிலும் தாமரை சின்னத்தை எடுத்துச் சென்ற பெருமை அவரையே சேரும்" என்றார்.
பின்னர் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், "தமிழிசைக்கு கிடைத்துள்ள வரலாற்று வாய்ப்புதான் இந்த ஆளுநர் பதவி. அவர் 20 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் ஆவதற்கான வாய்ப்பு உள்ளது. உயர்கல்வி, பண்பாட்டு தளத்தில் மிகப்பெரிய தாக்கத்தை அவர் உருவாக்க வேண்டும். தெலுங்கானா தமிழ்நாடு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போட தமிழிசை முன்வர வேண்டும். அதன்மூலம் தெலுங்கு - தமிழ் இணைப்பு பாலம் வலுப்பெறும். மோடியும் அமித்ஷாவும் தொலைநோக்கு பார்வையோடுதான் தமிழிசைக்கு ஆளுநர் பதவி வழங்கியுள்ளனர். தற்போது அவருக்கு இருக்கும் வரவேற்பு ஆறு மாதத்திற்கு முன்னர் இருந்திருந்தால், அவர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பார்" என்று கூறினார்.
இதையும் படியுங்க:
துணிச்சலுக்கு ஜெயலலிதா; தமிழ் உணர்வுக்கு கருணாநிதி - புகழ்ந்த தெலங்கானா ஆளுநர்