சென்னை: சென்னையிலிருந்து கொச்சி செல்ல வேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் இன்று(டிச.25) மாலை 6.30 மணிக்கு 81 பயணிகளுடன் புறப்பட தயாரானது.
பயணத்திற்காக, பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறி அமா்ந்தனர். விமானம் ஓடுபாதையில் ஓடத்தொடங்கும் போது, அதில் திடீா் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுப்பிடித்தார்.
இதையடுத்து விமானத்தை ஓடுபாதையிலேயே அவசரமாக நிறுத்திய விமானி, சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து விமானம் மீண்டும் அது நிற்க வேண்டிய இடத்திற்கே கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. விமான பொறியாளர்கள் விமானத்திற்குள் ஏறி, தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய முயன்றனர்.
எனினும், உடனடியாக கோளாறை சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு ஓய்வு கூடத்தில் தங்கவைக்கப்பட்டனர். மாற்று விமானத்தில் பயணிகளை அனுப்ப ஏற்பாடுகள் நடைபெற்றன.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை உரிய நேரத்தில் விமானி கண்டுப்பிடித்ததால், விமானத்திலிருந்த 5 விமான ஊழியா்கள், 81 பயணிகள் உள்பட 86 போ் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
இதையும் படிங்க: விமானத்தில் கடத்தப்படவிருந்த வெளிநாட்டுப் பணம் பறிமுதல்