கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டன.
இந்நிலையில், தள்ளிவைக்கப்பட்ட 10ஆம் வகுப்பு தேர்வுகள் வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள் என பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
இதனிடையே, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வலியுறுத்தி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், ”தற்போது கோவிட் - 19 வைரஸ் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இந்தச் சூழலில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பதாக வந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் முதலமைச்சர் அறிவித்துள்ள நான்காம் கட்ட ஊரடங்கில் 12 மாவட்டங்களில் தளர்வுகள் இல்லை என்ற நிலையில், மே 31ஆம் தேதிவரை ஊரடங்கில் உள்ள 10ஆம் வகுப்பு மாணவர்களை எவ்வித பயிற்சியுமின்றி 68 நாள்கள் கழித்து நேரடியாக தேர்வெழுத நேர்கிற, கடினமான சூழ்நிலையினையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, அங்கு தேர்வு பணி மேற்கொள்பவர்களுக்கு பாதுகாப்பு கவச உடை வழங்கி, தேர்வினை நடத்திடுவது என்பது உளவியல் ரீதியாக ஆசிரியர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
பொதுத்தேர்வு எழுதவிருக்கிற சுமார் எட்டு லட்சம் மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு தேர்வு தேதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
தனியார் பள்ளிகளின் நிர்பந்தத்தினால் அரசு இதுபோன்ற நிலையை எடுத்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இந்தச் சூழலுக்கு இடமளிக்காத வகையில், தமிழ்நாடு அரசு ஜூன் மாதம் 1ஆம் தேதி பொதுத்தேர்வு நடத்த வெளியிட்டுள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:பொதுத்தேர்வை தள்ளிவைக்க வலியுறுத்தி முதலமைச்சருக்கு மாணவர் கடிதம்!