சென்னை : தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 22ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கினார். இதில், இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பில், திருநெல்வேலி கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் படித்த மாணவர் சங்கர், 26 பதகங்களையும், 2 பணப் பரிசுகளையும் பெற்றார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்புரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்தியா 2070ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு இல்லாத நாடாக மாறுவதற்கு உறுதிபூண்டு உள்ளதாகவும், இந்தியாவிற்கு உள்ள எதிர்கால கனவுத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறுவது காலத்தின் கட்டாயம் என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் பல்வேறு துறைகளில் முன்னணியில் இருந்தாலும், மாநிலங்களுக்கிடையே சில துறைகளின் வளர்ச்சியில் சமமற்று போக்கு காணப்படுகிறது என்றும், அவ்வாறு இல்லாமல், மாநிலங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சியே தற்போது இந்தியாவின் தேவையாக உள்ளது என்றும் தெரிவித்தார். "செப்புமொழி 18 உடையாள் சிந்தனை ஒன்றுடையாள்" என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப நாம் அனைவரும் இருக்க வேண்டும் என்றும் ஆளுநர் கூறினார்.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற, தமிழ்நாடு மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், இந்த கல்வியாண்டில் பல்வேறுப் பாடப்பிரிவுகளில் முதன்மைப் பெறும் மாணவர்களுக்கு 15 விருதுகளை அறிவித்தார்.