நேற்று (மார்ச் 9) சென்னையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், "இந்த 15 ஆண்டுகளில் தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதால் ஏற்படும் இழப்புதொகை மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய். இதில் ஏற்கனவே 54,000 கோடி ரூபாயை இழந்து விட்டோம். மேலும் இந்த ஒப்பந்தங்களை உடனடியாக ரத்து செய்யாவிட்டால் மேலும் 46,000 கோடி ரூபாயை இழக்க நேரிடும். இந்த ஊழல் முறைகேட்டிற்கு பொறுப்பான துறை அமைச்சர்கள் தங்கமணி மற்றும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்பட பொது ஊழியர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி அறப்போர் இயக்கம் இன்று (அதாவது மார்ச் 9) லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் கொடுத்துள்ளது", எனத் தெரிவித்தார்.
"மின்சாரம் கடந்த ஐந்து ஆண்டுகளாக சந்தையில் ஒரு யூனிட்டுக்கு 2.50 ரூபாய் முதல் 3.50 ரூபாய் வரையில் எளிதாக கிடைக்கிறது. ஆனால் நம் தமிழ்நாடு அரசு சட்ட விரோத ஒப்பந்தங்கள் மூலம் தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒரு யூனிட் 4.90 ரூபாய் முதல் ஆறு ரூபாய் வரையில் கொள்முதல் செய்து வருகிறது.
இந்த நீண்ட காலம் ஒப்பந்தம் மூலம் 15 ஆண்டுகளுக்கு தினமும் 5.79 கோடி யூனிட்டுகள் வாங்கப்படுகிறது, இது தான் இந்த ஊழலின் மிக முக்கிய சாராம்சம்" என புகார் தெரிவித்தார்.
"மிக முக்கியமாக இந்திய அரசின் தலைமை கணக்கு தணிக்கையாளர் 2013 முதல் 2018 வரை இந்த ஒப்பந்தம் மற்றும் வேறு சில ஒப்பந்தங்கள் மூலம் தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்ததில் ஏற்பட்ட இழப்பு, கிட்டத்தட்ட 30,072 கோடி ரூபாய் எனத் தெரிவித்துள்ளார்" என்று கூறிய அவர், "இந்தத் தணிக்கை அறிக்கை தமிழ்நாடு அரசால் இன்று வரை சட்டசபையில் தாக்கல் செய்யப்படவில்லை. அறப்போர் இயக்கம் இன்று (மார்ச் 9) இந்தத் தணிக்கை அறிக்கையின் நகலை மக்கள் நலன் கருதியும் இந்த துறையின் நலன் கருதியும் வெளியிட்டுள்ளது" எனக் கூறினார்.
மேலும், "தனியாரிடம் 11 ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அதில் 9 முதல் 10 நிறுவனங்களால் கிரிட் (grid) இணைப்பு நடக்கும் வரை மின்சாரம் தர இயலாது என்று தெரிந்தும், ஒரு யூனிட் 491 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது. பெரும்பாலான நிறுவனங்களால் ஐந்து மாதத்திற்குள் மின்சாரம் தர இயலவில்லை. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு அவர்கள் தரவில்லை. அப்படி இருந்தும் ஒப்பந்தங்களை ரத்து செய்யாமல் கொள்முதல் செய்தார்கள்.
சந்தை மதிப்பு யூனிட்டுக்கு வெறும் இரண்டு ரூபாய் முதல் 3.50 ரூபாய் வரை உள்ள சூழ்நிலையில், 2016-17 முதல் கொள்முதல் செய்ய ஆரம்பித்த மின்சார வாரியம், தனியார் நிறுவனங்களுக்கு ஐந்து முதல் ஆறு ரூபாய் வரை கொடுத்து வாங்கத் தொடங்கி, இன்று வரை இது தொடர்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இதனால் ஏற்பட்ட இழப்பு மட்டும் 25,000 ரூபாய் கோடியாக உயர்ந்தது. இந்த ஒப்பந்தங்களுக்கு ஆணையம் ஒப்புதல் கொடுப்பதற்காக, இந்த ஒப்பந்தம் மீது மின்வாரியத்தில் முடிவு எடுத்த இருவரையே (அக்ஷய் குமார் மற்றும் ராஜகோபால்) மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் உறுப்பினராக கொண்டு வந்து ஒப்புதல் பெற்றது மின்வாரியம். ஆணையத்தின் மற்றொரு நபரான நாகல்சாமி இந்த ஒப்பந்தத்தில் உள்ள சட்டவிரோதச் செயல்களை சுட்டிக்காட்டி ஒப்புதல் தர மறுத்தார். இதனை அறப்போர் இயக்கம் இன்று வெளிக் கொணர்ந்துள்ளது" என கூறினார்.
இதையும் படிங்க: பெண் எஸ்பி வழக்கு - செங்கல்பட்டு எஸ்பியை பணியிடை நீக்கம் செய்த தேர்தல் ஆணையம்!