சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஏப். 22) வெளியிட்டுள்ள அறிக்கையில், "மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஏப். 22) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஏப். 23, 24 நிலவரம்: தென்தமிழ்நாடு, கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நாளை (ஏப். 23) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், சேலம், நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை மறுநாள் (ஏப். 24) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை நிலவரம்: கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஏப். 25, 26 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் எட்டயபுரம் (தூத்துக்குடி) 4 செ.மீ, சிவலோகம் (கன்னியாகுமரி), ஆயிக்குடி (தென்காசி), மடத்துக்குளம் (திருப்பூர்) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" என்று குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாள்களுக்கு மழை