கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறி வெளியே சுற்றியதாக மாநிலம் முழுவதும் சுமார் 1.94 லட்சம் பேர் மீது வழக்குப்பதிவு செய்தும், சுமார் 1.80 லட்சம் வாகனங்களை பறிமுதல் செய்தும் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் இவ்வழக்குகளில் தொடர்புடையோரிடமிருந்து சுமார் 90 லட்சம் ரூபாய் வரை அபராதத் தொகையை வசூலிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் சுமார் 25 ஆயிரம் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்களில் பலர் காவல் நிலையத்தை அணுகி அத்தியாவசிய தேவைகளுக்காகக் கூட வெளியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி, வாகனத்தை திருப்பிக் கொடுக்கும்படி கோரிக்கை வைத்தனர். மேலும், பல்வேறு காவல் நிலையங்களில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பாதுகாப்பதும் போக்குவரத்து காவல்துறையினருக்கு கூடுதல் வேலையாக இருக்கிறது.
எனவே முதல்கட்டமாக, ஊரடங்கு உத்தரவு தொடங்கிய கடந்த மாதம் 24 ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 1 ஆம் தேதி வரை உத்தரவை மீறி வெளியே சுற்றியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, அபராதத் தொகையை செலுத்தியபின் உரியவர்களிடம் ஒப்படைக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். குறிப்பாக சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் மாவட்டத்திற்கு ஒரு நாளைக்கு சுமார் 10 முதல் 20 வாகனங்களை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அபராதத் தொகையை இணையம் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
காலை 7 மணி முதல் நண்பகல் 12:30 வரை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பெற்றுக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்ட வாகன ஓட்டிகள் மீண்டும் இக்குற்றத்தில் ஈடுபட்டால், சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொள்வார்கள் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ’வாகனத்தை மீண்டும் காவல்துறையினர் எங்கு ஒப்படைக்க சொல்கிறார்களோ? அங்கு ஒப்படைப்பேன். உறுதி மொழிக்கு எதிராக நடந்து கொண்டால் தன் மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு ஒத்துழைப்பு கொடுப்பேன்’ எனக்கூறி உறுதி மொழி படிவத்தில் கையெழுத்திட்டு காவல்துறை எழுதி வாங்கிய பின்னரே வாகனங்களை ஒப்படைக்கப்படுமென்றும் கூறப்பட்டுள்ளது. வாகனங்களை திரும்பப்பெறும்போது உரிய ஆவணங்களுடன் வரவேண்டுமென்றும் அதன் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிறப்பு பார்சல் ரயில் சேவை மே 3 வரை நீட்டிப்பு!