சென்னை: தமிழ்நாட்டில் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி டெல்லியிலிருந்து இன்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையம் வந்திறங்கிய அவரை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார்.
மேலும் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு ஆகியோரும் புதிய ஆளுநரை வரவேற்றனர். தலைமைச் செயலர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோரும் அவருக்கு வரவேற்பளித்தனர்.
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என். ரவி செப்டம்பர் 18 ஆம் தேதி பதவியேற்றுக்கொள்கிறார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, புதிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செப். 9 அன்று உத்தரவிட்டார். பிகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் 1952ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி பிறந்தவர் ஸ்ரீ ரவீந்திர நாராயண் ரவி.
இவர், 1974ஆம் ஆண்டு இயற்பியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். தனது கல்லூரி படிப்பை முடித்த ரவி பின்னர், பத்திரிகைத் துறையில் பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து, 1976ஆம் ஆண்டு கேரளாவிலிருந்து இந்தியக் காவல் பணி அலுவலராகத் தேர்வாகினார்.
பின்னர், 2012ஆம் ஆண்டு இந்திய உளவுத் துறையின் சிறப்பு இயக்குநராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். இதனைத் தொடர்ந்து, அவர் தேசிய நாளிதழ்களில் தேசியப் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து கட்டுரைகளை எழுதிவந்தார். 2018ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராகப் பணியாற்றினார்.
தொடர்ந்து 2019ஆம் ஆண்டு நாகலாந்து மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றார். தற்போது, ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். நாகலாந்து ஆளுநர் பணியினை அஸ்ஸாம் மாநில ஆளுநர் ஜெக்தீஷ் முகி கூடுதலாகக் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.