அரசு அலுவலர்களைப் பற்றி அவதூறு பரப்பியதாக கோவையைச் சேர்ந்த இணைய ஊடகவியலாளர்களை கடந்த 24 ஆம் தேதி காவல்துறை கைது செய்தது. இதற்கு கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தூண்டுதலின்பேரில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் அதிகார அத்துமீறலில் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” பேரிடர் காலத்தில் விஷமத்தனமாக, அரசு நிர்வாகம் மற்றும் மாநகராட்சிப் பணியாளர்களுக்கு எதிராக ஆதாரமற்ற செய்திகளைப் பரப்பும் நோக்கில் செயல்பட்டவரை, மாநகராட்சி ஊழியர் அளித்தப் புகாரின் பேரில் பேரிடர் கால சட்ட விதிமுறைப்படியான நடவடிக்கையை காவல்துறை எடுத்துள்ளது.
அப்படி ஒரு வலைதளம் இருப்பதே எனக்கு இப்போதுதான் தெரியும். ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின், ’நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக’, ’எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்று எதற்கெடுத்தாலும், சுகாதாரப் பேரிடர் போன்ற இந்த இக்கட்டான சூழலிலும் அரசு நிர்வாகிகளுக்கு எதிராக விஷம செய்திகளை தூண்டி விடுவதும், அத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு உறுதுணையாக உடனே அறிக்கை வெளியிட்டு மலிவான அரசியல் செய்வதுமாக இருப்பதை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
மக்கள் மனங்களை வெல்ல முடியாத விரக்தியில் முடங்கிக் கிடக்கும் ஸ்டாலின், அரசுப் பணியாளர்களை பொய்யான பிரச்சாரங்கள் மூலம், மன உளைச்சலுக்கு ஆளாக்கி, உயிர் காக்கும் அரசின் பணிகளை முடக்க நினைக்கும் விஷமிகளை ஊக்குவிப்பதையும், அரசியல் செய்வதையும் இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும் ” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'அதிகார அத்துமீறல் நடத்தும் அமைச்சர் வேலுமணியின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்' - ஸ்டாலின்