சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், தற்போது பல்வேறு தளர்வுகளுடன் இதுவரை ஐந்து முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து பிற மாவட்டங்களில் கட்டுக்குள் இருந்த கரோனா மீண்டும் வீரியம் பெற தொடங்கியது. இச்சூழலில் தமிழ்நாட்டில் நாளையுடன் (ஜூலை 31) ஊரடங்கு நிறைவடையும் நிலையில், கரோனா நிலவரம் குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று (ஜூலை 30) ஆலோசனை நடத்தினார். அதில், சில தளர்வுகளுடனும் புதிய விதிமுறைகளுடனும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டார்.
அந்த உத்தரவில், என்னென்ன விதிமுறைகள் போடப்பட்டுள்ளது என்பதனை விரிவாகக் காணலாம் (இந்தத் தளர்வுகள் நோய் பாதிப்பினால் அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பகுதிகளுக்கு சாராது)
அனுமதி:
- தனியார் நிறுவனங்கள் 75 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம்.
- 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படலாம்.
- 10 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் வருமானம் உள்ள சிறு கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மாவட்ட ஆட்சியர் அனுமதிபெற்று செயல்படலாம்.
- காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 7 மணி வரை இயங்கலாம்.
- ஏற்கனவே காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட பிற கடைகள், தற்போது காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.
- அத்தியாவசிய பொருள்கள், அத்தியாவசியமற்ற பொருள்கள் உள்பட அனைத்து பொருள்களையும் மின் வணிகம் மூலம் பெற அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அனுமதியில்லை:
- குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144இன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும்.
- நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.
- தொடர் வண்டி, விமான போக்குவரத்திற்கான தற்போதைய நடைமுறையே தொடரும்.
- இ-பாஸ் இல்லாமல், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இயலாது.
- ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறவிருக்கும் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள், மத்திய அரசின் வழிகாட்டுதலில்படி பின்பற்றப்படும்.
- அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி இல்லை.
- வணிக வளாகங்கள் செயல்படாது.
- தங்கும் வசதியுடன் கூடிய உணவகங்கள், பிற விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை தொடரும். (எனினும், மருத்துவத் துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் வெளிமாநிலத்தவர்களை தனிமைப்படுத்துவதற்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.)
- மெட்ரோ ரயில் சேவை இல்லை.
- திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், மதுபானக் கூடங்கள், பெரிய அரங்குகள் செயல்படாது.
- அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடைபெறாது.
- மாநிலங்களுக்குள் உள்ள பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து இயங்காது.