இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது,
"மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் இந்தியாவிற்குள் உள்நாட்டு விமானங்கள் மே 25ஆம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. விமானப் பயணிகளை மாநிலத்துக்குள் அனுமதிப்பது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விமானத்தின் மூலம் வரும் பயணிகள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேன் மூலம் கரோனா வைரஸ் தொற்று குறித்து அறிகுறி இருக்கிறதா என பரிசோதிக்கப்படுவார்கள். விமானப் பயணிகள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். விமானத்தில் வருபவர்களுக்கு தமிழ்நாட்டில் தங்குவதற்கு வீடு இல்லாவிட்டால் ஓட்டலில் தங்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட 14 நாட்களில் அறிகுறிகள் இருந்தால் மாவட்ட தொடர்பு எண்ணை தொடர்பு கொள்ளலாம். அல்லது அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு நோய் அறிகுறி இருந்தால் ஆர்டி, பிசிஆர் டெஸ்ட் எடுக்க வேண்டும். அதில் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டால் கோவிட்-19 சிகிச்சை அளிப்பதற்கு அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சைப் பெற வேண்டும். லேசான அறிகுறிகள் தென்பட்டால் வீட்டிலேயே தெளிவுப்படுத்திக் கொண்டு சிகிச்சைப் பெறலாம். 14 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு பரிசோதனை செய்து நோய்த் தொற்று இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசின் இ பாஸ் மூலம் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அப்பொழுது நோய்த் தொற்றால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இல்லை என்பதையும், காய்ச்சல், இருமல் உள்ளிட்ட எந்த நோயும் இல்லை என்பதையும், நோய்க்காக தனிமைப்படுத்தப்படவில்லை, நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அலுவலரை தொடர்புகொள்வேன், கடந்த இரண்டு மாதங்களாக கோவிட்-19 நோய் இல்லை, தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்றுக்கொள்கிறேன் போன்ற விபரங்களை பயணிகள் அளிக்க வேண்டும். இந்த விதிமுறைகள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் அவர்களை தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டார்கள்.
விமானத்தில் வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டவர் என்பதற்கான தேதியுடன் கூடிய முத்திரை விமான நிலையத்தில் கையில் போடப்படும். விமானத்தில் வருபவர் வீட்டிற்கு செல்வதாக இருந்தாலும், ஓட்டலுக்கு செல்வதாக இருந்தாலும் ஓட்டுநரின் செல்போன் உடன் கூடிய விவரங்களையும் இ பாஸில் தெரிவிக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் விமானம் மூலம் வருபவர்கள் யாரும் விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள். மாவட்ட ஆட்சியர் விமான பயணத்தில் வரும் பயணிகள் வெளியில் செல்வதற்கு முன்னர் அவர்கள் கையில் தனிமைப்படுத்தப்பட்ட முத்திரையை போடவேண்டும்.
விமான நிலையத்தில் பயணிகள் கொண்டு வரும் அனைத்துப் பொருட்களையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
அலுவலர்கள் பயணிகளை சோதனை செய்யும்போது முழு உடல் கவசம் முகக் கவசம் போன்றவற்றை அறிந்த பின்னர் சோதனை செய்ய வேண்டும். அறிகுறி உள்ளவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் தனிமைப்படுத்தும் மையங்களுக்கு நேரடியாக அழைத்துச் செல்ல வேண்டும். விமான நிலைய பணியாளர்களும் கோவிட்-19 பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
தமிழ்நாடு அரசின் இ பாஸ் இல்லாமல் யாரையும் தமிழ்நாட்டுக்குள் விமான நிலைய அலுவலர்கள் அனுமதிக்கக்கூடாது. இ பாஸ் பெறப்பட்ட பின்னரே விமான நிலையத்தை விட்டு வெளியேற்ற வேண்டும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.