கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த பொது நூலகங்கள், வரும் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதிமுதல் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், கன்னிமாரா நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், முழுநேர கிளை நூலகங்கள் ஆகியவை காலை 8 மணிமுதல் பகல் 2 மணிவரை திறக்கப்படும்.
இங்கு புத்தகம் பெற்றுச் செல்லும் பிரிவு, குறிப்புப் பிரிவு, சொந்த புத்தகங்களைப் படிக்கும் பிரிவு ஆகியவை திறக்கப்படும். கிராம நூலகங்கள், கிளை நூலகங்கள் ஆகியவை வழக்கமான நேரங்களில் (மதியம் 2 மணிக்கு முன்) செயல்படும் என்றும், இங்கு புத்தகம் பெற்றுச் செல்லும் பிரிவு மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பகுதி நேர நூலகங்கள் செயல்படவும், நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நூலகங்களைத் திறக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நூலகங்களில் குளிர்சாதன வசதி பயன்படுத்துவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வீட்டிலிருந்து சொந்த புத்தகங்களை எடுத்துவந்து படிப்போர், தங்களது புத்தகங்களையோ, மடிக்கணினி, பேனா போன்றவற்றையோ மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
65 வயதுக்கு மேற்பட்டோர், 15 வயதுக்குள்பட்டோர், கர்ப்பிணிகள், நாள்பட்ட நோய் பாதிப்புள்ளவர்கள் நூலகத்திற்கு வர அனுமதி கிடையாது. நூலகத்தை வாரம் ஒருமுறை தூய்மைப்படுத்த வேண்டும், நூலகப் பணியாளர்கள், பயனாளர்கள் என அனைவருக்கும் உடல் வெப்பநிலை சோதனை செய்வது கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், நூலகத்திற்குள் உள்ளே வரும்போது தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில், கோடுகள் வரையப்பட வேண்டும் எனவும், நூலகப் பணியாளர்கள், வாசகர்கள் என அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: அடுத்த மாதம் முதல் நடமாடும் ரேஷன் கடைகள் - அமைச்சர் செல்லூர் ராஜு