சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ( ஏப். 4) இந்து சமய அறநிலையத் துறை உயர் அலுவலர்களுக்கு புதிய வாகனம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு, 5 கோடியே 8 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 69 புதிய வாகனங்களை அலுவலர்களுக்கு வழங்கினார்.
முன்னதாக இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், உயர் அலுவலர்களுக்கு 8 கோடி ரூபாய் செலவில் 108 வாகனங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் முதல்கட்டமாக இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், மக்கள் தொடர்பு அலுவலர், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், செயல் பொறியாளர்களுக்கு 69 புதிய வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, 5 கோயில்களில் முழு நேர அன்னதான திட்டம், நூற்றுக்கும் மேற்ப்பட்ட கோயில்களுக்கு குடமுழுக்கு, பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த தேர்களை பழுதுபார்த்து வீதி உலா, கோயில் குளங்களை புனரமைத்தல் உள்ளிட்ட திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஏழை, எளிய மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு அறநிலைத்துறையின் கீழ் புதிய பள்ளி, கல்லூரிகள் தொடங்க பணிகள் நடந்துவருகின்றன.
இதையும் படிங்க: 'ஆன்மீகத்திற்கு எதிரான ஆட்சி மாறி; திருக்கோயில்களுக்குப் பொற்கால ஆட்சி'