தலைமைச் செயலகத்தில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் சந்தித்து, கரோனா பரவல் காரணமாக 10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கக் கோரி மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வசீகரன், ”கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் தொடர்ந்து மூடி இருப்பதால், இந்தாண்டு பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது அரசு. இந்த முடிவு வரவேற்கக்கூடியது என்றாலும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சென்று படித்த மாணவர்களுக்கு மட்டுமே பயன்தரக்கூடியதாக இது அமைந்திருக்கிறது.
திறந்தவெளி கல்வியில் படித்த 10 ஆம் வகுப்பு தனித்தேர்வெழுதவிருந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு, இதுவரை அரசு எவ்வித அறிவிக்கையும் செய்யவில்லை. இதனால், அவர்களின் எதிர்கால கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, திறந்தவெளி கல்வி மூலம் படித்து தனித்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவிக்க வேண்டும். இதில் பாகுபாடு கூடாது. இதுமட்டுமின்றி மேல்நிலைப்பள்ளிகளில் 11ஆம் வகுப்பு, பட்டயப்படிப்பு ( Diploma Studies), தொழிற்கல்வி படிப்புகள் (ITI) சேர்வதற்கு பத்தாம் வகுப்பு மட்டுமே போதுமானது என்று அரசாணை பிறப்பிக்கவேண்டும்.
கரோனா சிகிச்சையில் தமிழ்நாடு அரசு வெளிப்படைத் தன்மையோடு இல்லை. மேலும், பிளாஸ்மா சிகிச்சைக்கு முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார். ஆனால், அதற்குறிய பணிகளை இன்னும் முழுவீச்சில் முன்னெடுக்கவில்லை. டெல்லியில் ஆம் ஆத்மி அரசு கரோனாவை திறம்பட கையாண்டு வருகிறது ” என்றார்.
இதையும் படிங்க: இயல்பு நிலைக்கு திரும்புமா சென்னை? - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சிறப்புப் பேட்டி!