சென்னை: சென்னையில் செய்தியாளரைச் சந்தித்தபோது, “மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் கடந்த திமுக ஆட்சியில் அறவழிப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்தப் போராட்டங்களில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது கடந்த ஆட்சியில் பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
போராட்டக் களத்திற்கு வந்து தற்போதைய முதலமைச்சரும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், 'உங்களுடைய கோரிக்கைகள் நியாயமானவை, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்' என உறுதிமொழி அளித்தார். மேலும் அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்டுள்ள பழிவாங்கும் நடவடிக்கைகள் அனைத்தும் ரத்துசெய்யப்படும் எனவும் அறிவித்தார்.
முதலமைச்சருக்கு நன்றி
அதேபோல் திமுக தேர்தல் அறிக்கையில் ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகளை இடம்பெறச் செய்தார். தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாக கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் விதி எண் 110இன்கீழ் போராட்டக் காலத்தில் எடுக்கப்பட்ட அனைத்துப் பழிவாங்கும் நடவடிக்கைகளும் ரத்துசெய்யப்படும் என அறிவித்தார்.
மேலும் அதனை நிறைவேற்றும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் ரத்துசெய்து அரசாணை வெளியிட்டுள்ளனர். இதனை ஜாக்டோ ஜியோ சார்பாக வரவேற்கிறோம். ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என நம்புகிறோம்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அழைத்துப் பேசும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் உள்ளதால் வரும் ஐந்து ஆண்டுகளுக்குப் போராட்டங்கள் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படாது என நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தீபாவளி போனஸ் கேட்டு தையல் தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!