வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தியாகு என்கிற தியாகராஜன் என்பவர் கொலை முயற்சி வழக்கில் வாலாஜாபேட்டை காவல் துறையால் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவர் மீது பிற காவல் நிலையங்களிலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் தியாகராஜன் சிறை அறையில் லுங்கியில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக்கண்ட சிறை அலுவலர்கள், அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தியாகராஜன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக வேலூர் சிறைத்துறை கண்காணிப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த வழக்கை மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் விசாரித்தார்.
விசாரணையின்முடிவில் ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் பிறப்பித்துள்ள உத்தரவில், சிறையில் இருக்கும் கைதிகளின் பாதுகாப்புக்குச்சிறை அலுவலர்களே பொறுப்பு எனவும்; சிறைத்துறை அலுவலர்கள் பணியை முறையாக செய்யாததால் கைதி தியாகராஜன் தற்கொலை செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் உயிரிழந்த கைதி தியாகராஜனின் தாயாருக்கு இழப்பீடாக மூன்று லட்சம் ரூபாயை ஒரு மாதத்திற்குள் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சென்னை ஐஐடியின் நிர்வாக எம்பிஏ பட்டப்படிப்பு... அக்டோபர் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்