சென்னை: மாநிலத்தின் முன்கள பணியாளர்களான காவலர்கள், மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்கள், மருத்துவர்கள் என அனைவரும் கரோனா தொற்றின் கோரப் பிடியில் சிக்கி பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் சிலர் உயிரிழந்தும் வருகின்றனர்.
இதன் கோரப் பிடியில் இருந்து சிறை கைதிகளும் தப்பவில்லை. தமிழ்நாட்டில் சென்னை புழல், வேலூர், மதுரை, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட 9 இடங்களில் மத்திய சிறைச்சாலைகளும், பெண்களுக்கான 5 தனிச்சிறைச்சாலைகளும், 13 மாவட்ட சிறைகளும், 96 ஆண்களுக்கான கிளை சிறைகளும்,12 சிறுவர் சீர்திருத்தப் பள்ளியும் (பார்ஸ்டல் பள்ளி), 3 திறந்தவெளி சிறை என மொத்தம் 138 சிறைகள் உள்ளன.
இந்த சிறைச்சாலைகளில் 70 விழுக்காடு விசாரணை கைதிகளும், 30 விழுக்காடு தண்டனை கைதிகளும் இருந்து வருகின்றனர். கரோனா முதல் அலையின் போது சிறையின் தூய்மை பணியாளர்கள், கைதிகள் என 40க்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து சிறைகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கைதிகள் மேற்கொண்டு வந்த துணி நெய்தல், காய்கறி பயிரிடுதல், மெழுகுவர்த்தி செய்தல் உள்ளிட்ட கைவினை பொருட்கள் தயாரிக்கும் பணிகள் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
சிறைச்சாலைகளில் கைதிகள்
தொடர்ந்து சிறைகளில் சிறிய குற்றத்திற்காக தண்டனை அனுபவித்து வந்த 3,500-க்கும் மேற்பட்ட கைதிகள் இடைக்கால பிணையில் விடுவிக்கபட்டனர். பார்வையாளர்களுக்கு தடை விதித்து காணொலி அழைப்பு மூலம் பார்வையாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், சிறைகளில் முகக்கசவம், தகுந்த இடைவெளியை கைதிகள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இவ்வேளையில் பிணை, அவசர கால விடுப்பு, இடைக்கால பிணை உள்ளிட்ட காரணங்களால் வெளியே சென்ற கைதிகள் மீண்டும் பரிசோதனை செய்து சிறைக்கு திரும்பினர். அப்போது 3 கைதிகளுக்கு கரோனா இருந்ததால் தனியாக அறை ஒன்று அமைத்து தனிமைப்படுத்தி உள்ளனர். இதனால் கரோனா பரிசோதனை செய்து 14 நாட்கள் மருத்துவமனையில் தனிமைபடுத்திக் கொண்ட பின்பே சிறைக்குள் அவர்கள் அனுமதிக்கபடுகின்றனர்.
சிறைக்குள் கரோனா தொற்றின் பரவலை குறைக்கும் வகையிலும், கைதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையிலும் கொலை, போக்சோ, ஆயுதம் கடத்தல், போதை பொருள் கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு, ஏழு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறக்கூடிய வகையில் உள்ள குற்றவாளிகளை மட்டுமே கைது செய்ய வேண்டும் என டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி கொள்ளை, திருட்டு போன்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எளிதாக முன் பிணை கிடைக்கும் என்பதால், கைதுசெய்து கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி வருவதாக சிறைதுறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
750 கைதிகளுக்கு கரோனா தடுப்பூசி
புழல் சிறையில் 5,000 கைதிகள் வரை அடைக்கலாம். ஆனால் தற்போது கரோனா பரவல் காரணமாக 3,000 கைதிகள் மட்டுமே இருப்பதாகவும், சிறைக்கைதிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும் சிறைக்காவலர் ஒருவர் தெரிவித்தார்.
அதுவும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு 14 நாட்கள் கிளை சிறைகளில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தபட்ட பின்னரே மத்திய சிறைக்கு அழைத்து வருகின்றனர். சிறை கைதிகளுக்கு சோப்பு, முகக்கவசம், கிருமி நாசினி போன்றவற்றை வழங்கி தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், நடைபயிற்சி, பிற கைதிகளுடன் உரையாடுவதையும் குறைத்து கட்டுப்பாட்டுக்குள் வைத்து வருவதாகவும் தெரிவித்தார்.
சிறையில் அவசர கால விடுப்பில் சென்ற நபர் மீண்டும் சிறைக்கு வந்தபோது கரோனா தொற்று ஏற்பட்டதால், சிறைக்கு உள்ளே ஒருவரையும் அனுமதிப்பதில்லை என தெரிவித்தார். இதுவரை தமிழ்நாடு சிறைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 750 கைதிகளுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், கரோனாவை கட்டுப்படுத்த சிறைக்கைதிகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறினார்.
உச்ச நீதிமன்ற உத்தரவு
"சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கரோனா பரவும் அபாயம் உள்ளது. அதனால் கூட்டத்தை குறைக்க அந்தந்த மாநில அரசு குழு ஒன்றை தொடங்கி, ஏழு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த குற்றவாளிகளுக்கு 3 மாதம் பிணை விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தது.
அதனையடுத்து அனைத்து மாநில அரசுகளும் 7 ஆண்டுகள் நிறைவு செய்த கைதிகளுக்கு, 3 மாதம் பிணை விடுப்பு வழங்கினர். ஆனால், தமிழ்நாடு அரசு மட்டும் குழுவைக் கூட்டி 3 மாதம் விடுப்பு வழங்கமுடியாது எனத் தெரிவித்தது.
இதனையடுத்து மீண்டும் உச்ச நீதிமன்றம் இதனை பின்பற்றுமாறு தெரிவித்துள்ளதால், 7 ஆண்டுகள் நிறைவு செய்த கைதிகளுக்கு 3 மாதம் பிணை விடுப்பு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என சிறைக்கைதிகள் உரிமை மைய தலைவரும், வழக்கறிஞருமான புகழேந்தி தெரிவித்துள்ளார்.