சென்னை: தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கம் அனுமதி மறுத்ததை எதிர்த்து வட்டெறிதல் வீராங்கனை நித்யா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை முன்னதாக விசாரித்த நீதிபதி ஆர். மகாதேவன், விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளாக விளையாட்டு வீரர்கள் மட்டுமே இருக்க வேண்டும். அரசியல்வாதிகள், தொழிலதிபர்களை நியமிக்க கூடாது என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் தரப்பில், மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் இன்று (ஏப்ரல் 26) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், "இந்த உத்தரவில் என்ன தவறு உள்ளது. விளையாட்டு சங்கங்களில் அரசியல்வாதிகளுக்கு என்ன தொடர்பு. இவர்கள் விளையாட்டு வீரர்களுக்கான வசதிகளை பறித்துச் செல்லவே விளையாட்டு சங்கங்களுக்குள் நுழைகின்றனர்.
அணிக்காகவும், மாநிலத்துக்காகவும், தேசத்துக்காகவும் விளையாடும் வீரர்கள் மிக மோசமாக நடத்தப்படுகின்றனர். நாட்டுக்காக போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு முறையான வசதிகள் செய்து கொடுக்கப்படுவதில்லை. பயிற்சியாளர்களின் நடத்தை குறித்து நீதிமன்றத்தில் கூற முடியவில்லை.
அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களை விளையாட்டு சங்கங்களுக்கு தலைவராக ஏன் நியமிக்க வேண்டும். இச்சங்கங்களில் விளையாட்டு வீரர்கள் அல்லாதவர்கள் ஏன் நுழைய வேண்டும். ஆகவே தனி நீதிபதி உத்தரவை அமல்படுத்த உத்தரவிடப்படுகிறது. மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் உள்ள சட்டவிரோத ரிசார்ட்களை அகற்றக் கோரிய மனு தள்ளுபடி