சென்னை: கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள தீரன் சின்னமலையின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தும், சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதேபோன்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "தீரன் சின்னமலையின் புகழ் போற்றும் வகையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவருடைய சிலையை நிறுவி திறந்து வைத்தார். சாதி மாதத்திற்கு அப்பற்பாட்டவர் தீரன் சின்னமலை . ஆங்கிலேயர்களுக்கு எதிராக குரல் எழுப்பியவர் எனக் கூறினார்.
தமிழ் புத்தாண்டில் அளிக்கப்பட்ட ஆளுநரின் தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு கலந்து கொள்ளதாது ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் வேதனை அளிக்கும் செயல். தமிழைக் காக்க வேண்டும் என்று கூறும் திமுக, தேநீர் விருந்தில் பங்கேற்காதது ஏன்?. தனக்கு பிரச்சினை வரும் போது எல்லாம் தமிழை கையில் எடுத்துக் கொள்வார்கள். இலங்கையில் தொப்புள்கொடி உறவுகள் பாதிக்கப்பட்டப் போது திமுக என்ன செய்தது. ஆனால் தமிழ் கலாசாரம் போற்றப்படும் வகையில் தான் அதிமுக தேநீர் விருந்தில் கலந்து கொண்டோம்.
அதேபோல் 17 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த திமுக கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் கையில் ஆட்சியும், அதிகாரமும் இருந்தது. அப்போதே திமுக நடவடிக்கை எடுத்திருந்தால் நீட் தேர்வு வந்திருக்காது.
திமுக ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வை ரத்துச் செய்வதற்கான சூத்திரம் இருப்பதாக கூறிய திமுக ஏன் ரத்து செய்யவில்லை. அதிமுக ஒரு போதும் பதவிக்காக மாநில உரிமையை விட்டுக் கொடுக்காது. அதிமுகவிற்கு பதவி ஒரு போதும் பெரியதல்ல" எனத் தெரிவித்தார்.
பின்னர் ஜி.கே.வாசன் கூறுகையில், தமிழ்ப்புத்தாண்டு அன்று ஆளுநர் வைத்த தேநீர் விருந்தில் தமிழக அரசு கலந்து கொள்ளாதது தவறான செயல் என்றார். அதன்பின் பேசிய ஏ.கே.மூர்த்தி, வன்னியர் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வேண்டும் என பல்வேறு காலமாக பாமக போராடி வருவதாக கூறிய அவர், 10.5 சதவீதம் ஒதுக்கீட்டை நிறைவேற்றி தர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதனை அவர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆளுநர் நடத்திய தேநீர் விருந்து: ஆளுங்கட்சி புறக்கணிப்பு, எதிர்க்கட்சிகள் பங்கேற்பு