சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மறைந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து, அதற்கான நிதியை ஒதுக்கி ரூ. 50.80 கோடி செலவில் ஜெயலிதாவின் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த பணியை 2018ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நினைவு மண்டபத்திற்கான பணி, இரவு பகலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுவரும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், வரும் 18ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க டெல்லி செல்ல உள்ளதாகவும், அப்போது பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெற உள்ள ஜெயலிதாவின் நினைவிட திறப்பு விழாவிற்கு பிரதமரை அழைக்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு, நடைபெற்று வரும் பணிகள் குறித்த விவரங்களை, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார். அப்போது அவருடன், தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உடனிருந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், "மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு உலகத்தரம் வாய்ந்த நினைவிடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாடு மக்களின் வேண்டுகோளாகும். விரைவில் நினைவிடம் திறக்கப்பட உள்ளது. பணிகளை விரைந்து முடிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். நினைவிடம் கட்டும் பணிகளை பார்வையிட்ட முதலமைச்சர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார். இந்த பணிகள் முழுமை பெற்ற பிறகு எம்ஜிஆர் நினைவிடமும் புதுப்பிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜெயலலிதா நினைவிடத்தை திறக்க மோடிக்கு அழைப்பு