சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இப்பயணம் சில வாரங்களுக்கு முன் திட்டமிடப்பட்டு, பாஜக தேசிய தலைமையின் அனுமதி பெற்ற பிறகே நடந்ததாக கூறப்படுகிறது. தலைமைப் பண்புப் பயிற்சி, அரசியல் மேலாண்மை உள்ளிட்ட சில பயிற்சிகளுக்காகவும், அமெரிக்காவில் இருக்கும் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களை சந்திப்பதற்காகவும் அண்ணாமலை சென்றுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, அண்ணாமலை இலங்கை தமிழர் விவகாரத்தில் முனைப்பு காட்டி வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு அவர் இலங்கை பயணம் மேற்கொண்டிருந்தார். தமிழ்நாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்ச்சியிலும் பாஜக தலைவராக முதல் முறையாக அண்ணாமலை பங்கேற்றார். இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக அமெரிக்காவில் அண்ணாமலை பல்வேறு ஈழத் தமிழர்களை தனிப்பட்ட முறையிலும், தமிழர் அமைப்புகளையும் சந்தித்து உரையாட இருப்பதாக வெளியாகும் செய்தி அரசியல் வட்டாரத்தில் சிறிது கவனம் பெற்றிருக்கிறது.
2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஈழப்பிரச்சனையில் காங்கிரஸ் மற்றும் திமுக மீது மிகப்பெரிய விமர்சனம் இருந்தது. அதே போன்று காங்கிரஸ், திமுகவுக்கு எதிராக வியூகங்களை வகுக்க அண்ணாமலை பயணம் செய்வதாகவும் ஒருதரப்பில் கூறப்படுகிறது. இந்தப் பயணம் முடித்து தமிழ்நாட்டுக்கு வந்து ஈழ விவகாரம் தொடர்பாக அரசியலில் அண்ணாமலை ஈடுபட உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: வந்தியத்தேவனை பிளேபாயாக காட்டுவதா? - மணிரத்னம் மீது போலீசில் புகார்