தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ஜூன் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நடக்க உள்ளதாகவும், கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்ற இருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "அன்றைய தினம் முடிவில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் பேரவை கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். கூட்டத்தில் பங்கேற்கவுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசுப் பணியாளர்கள் உள்பட அனைவரும் கரோனா பரிசோதனை சான்றிதழ் இருந்தால் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
ஆளுநர் உரையின் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசுவார். குறைந்த அளவிலேயே அரசு அலுவலர்கள் பணியாற்றுவதால் சட்டப்பேரவை கூட்டத்தில் கேள்வி-பதில் நேரம் நடைபெற வாய்ப்பில்லை. கூட்டம் தகுந்த இடைவெளியை பின்பற்றி நடைபெறும்.
அனைத்து கட்சி பிரதிநிதிகளும் தங்களது கருத்துக்களை எடுத்துக்கூற உரிய வாய்ப்பு அளித்து சுமுகமாக சட்டப்பேரவை நடைபெறும். கரோனா தொற்று தடுப்பு பணிகளில் அனைத்து கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களும் இணைந்து செயல்பட அழைப்பு விடுத்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக அனைவரும் இணைந்து தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் இதுவரை எவ்வித ஒரு குற்றச்சாட்டும் எழவில்லை. அதுபோலவே வரும் சட்டப்பேரவை கூட்டத்தையும் எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லாமல் சுமுகமாக நடத்துவேன்" என தெரிவித்தார்.